திங்கள், 22 ஆகஸ்ட், 2011

இந்தியாவில் இஸ்லாம்-7

தொடர்-7: தோப்பில் முஹம்மது மீரான்
பழங்குடியினர் ஆன சமண புத்த மதத்தவர்கள்
வியாபார நோக்குடன் இங்கு அராபியர் வந்தனரே தவிர மதம் பரப்பும் நோக்கத்தோடு வரவில்லை என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மந்தமான வளர்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது.
சமண புத்த மதத்தை சார்ந்த பாணர், வேடர், குறவர் போன்ற மக்கள் பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆரியர்களுடைய கொடுமை தாங்க முடியாமல் உயிருக்காக காடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுடைய பின் தலைமுறையினரே இன்று காடுகளில் வாழ்ந்து வரும் மழைவாழ் பழங்குடியினர். இவர்கள் இப்போதும் சமண மத முக்கிய கடவுள்களான பார்சுவ நாதரையும், பத்மாவதியையும் வணங்கி வருகின்றனர் என்பதற்கு ‘சிங்கேரி அம்மா’ என்று ஊர்மக்கள் அழைத்து வருகின்ற, வயநாடு காட்டில் உள்ள சிங்கேரி பகவதிக் கோயிலில் நடக்கும் விழாவே ஓர் எடுத்துக் காட்டாகும்.
விழாக் காலங்களில் ஆதிவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து ஆராதிப்பது இந்த தாய் தெய்வத்தையாகும். அவர்களில் பாணர்களுக்கு தாய் கடவுள் மீது மிகவும் விருப்பம், தாயின் புகழ் உரைப்பதில் பரசுராமனை மக்கள் மறந்து போகின்றனர்.
இக்கோயிலில் உள்ள பார்சுவநாதரை ‘பரசுராமனாகவும்’ பத்மாவதியை ‘பகவதியாகவும்’ (பரசுராமனும் பகவதியும் ஹிந்து கடவுள்கள்) மாற்றிவிட்டனர் ஹிந்துக்கள். ஆனால் ஆதிவாசிகள் இப்போதும் சமணக் கடவுள்களாகவே பார்சுவநாதரையும் பத்மாவதியையும் கருதி வழிபட்டு வருகின்றனர் (’மாத்ருபூமி’ மலையாள வார இதழ் 1989 நவம்பர் 5-11 இதழ்) என்று டாக்டர் நெடுவட்டம் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த மலைவாழ் மக்களே தென்னக மண்ணின் மைந்தர்கள்.
சமண புத்த மதங்களின் தளர்ச்சி, ஆரிய மதத்தைத் திணிக்கும் பொருட்டு மக்களிடையே கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரம செயல்களால் பீதி அடைந்த மக்களின் ஆதரவற்ற நிலை, யூத மதத்தை யூதர்கள் பரப்பாமல் மவுனம் சாதித்தல், கிறிஸ்தவ மதம் வேகமாகப் பரவிவரும் சந்தர்ப்பம், இந்த சூழ்நிலை ஏக இறையையும் சமாதானத்தையும் சாந்தியையும், சிலை வணக்கமுறை அல்லாத ஓர் வணக்க முறையையும் போதிக்கும் ஒரு புது மதம் வளர சாதகமாக அமைந்தது. ஒடுக்கப்பட்டவர்களாக இருளில் தப்பிய மக்களுக்கு இஸ்லாத்தின் வருகை பேரொளியாக வழிகாட்டியது.
இஸ்லாம் மேற்கு கடற்கரையில் தோன்றியது நபி(ஸல்) அவர்கள் காலத்திலா? பிற்காலத்திலா?
அராபியர், ரோமானியர், கிரேக்கர் முதலியோர் கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்ற துறைமுகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது கொடுங்கல்லூர் ஆகும். இது இந்தியாவிலேயே பழமை வாய்ந்த துறைமுகங்களில் ஒன்று இந்தியாவில் நெடிய காலம் ஆட்சி புரிந்து வந்த வெளிநாட்டவர் முதலில் கப்பலில் இறங்கியது இங்கேயாகும்.
அலெக்சாண்டிரியா (எகிப்து)வுக்கும் முசிரிக்கும் இடையிலான தூரம் 100 நாள் பயண தூரம் என்று ‘ப்ளீனி’(Pliny)என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். எகிப்தை சார்ந்த ஹிப்பாலஸ் (Hippalus)என்ற மாலுமி கடல் வழியாக முசிரிக்கு சுருக்கமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அத்தோடு பயண தொலைவு 40 நாட்களாக சுருக்கியது. இக்கண்டுபிடிப்பு கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கூறி வருகின்றனர். எதுவாக இருப்பினும், அரபு நாடு இந்தியாவுடன் குறிப்பாக மேற்கு கிழக்கு கடற்கரை துறைமுகங்களோடு நெருங்கிய வியாபார தொடர்பு கொண்டிருந்தது. இது எல்லோரும் தெரிந்ததே.
அரேபியாவிலிருந்து பல பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்கவும். இங்கிருந்து சுக்கு, மிளகு போன்ற பல பொருட்களை வாங்கிச் செல்லவும் செய்தனர். பண்ட மாற்று முறையில் இவ்வியாபாரம் நடந்திருந்ததாக கூறப்படுகிறது. அராபியர்களுடைய கப்பல்கள் வருவதை எதிர்நோக்கியும், அவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பியும் இங்குள்ள ஆட்சித் தலைவர்கள் பலதரப்பட்ட உதவிகள் செய்து அராபியர்களை துறைமுக நகரங்களில் தங்குமிடமும் அளித்தனர்.
ஆட்சியாளர்களுடைய பேராதரவோடு மேற்கு கடலோர துறைமுகங்களில் தங்கி வந்த அராபியர்களில் சிலர் உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மண வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளை ‘கலாசிகள்’ என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கலாசிகளின் எண்ணிக்கைப் பெருகியது. இந்த கலாசிகளை இங்குள்ள மக்கள் ‘மகா பிள்ளை’ (பெரிய இடத்து பிள்ளை என்ற பொருளில் இருக்கக்கூடும்) என்று அழைத்தனர். நாளடைவில் மகா பிள்ளை என்ற சொல் மருவி ‘மாப்பிள்ளை’ என்றாகிவிட்டது.
இதுபோன்று கிரேக்கர் ரோமானியர் முதலிய கிறிஸ்தவர்களுக்கு நம்நாட்டுப் பெண்களில் பிறந்த குழந்தைகளையும் ‘மகா பிள்ளை’ என்றே அழைத்தனர். கோட்டயம் சங்ஙளாச்சேரி போன்ற பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் ‘மாப்பிள்ளை’ என்றுதான் இப்பவும் அழைக்கப்படுகின்றனர். மலபார் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மாப்பிள்ளை என்று அறியப்படுகின்றனர். இருவரையும் அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம்களை, ஜோனை மாப்பிள்ளை என்றும், கிறிஸ்தவர்களை நஜ்ரானி மாப்பிளை என்றும் அழைக்கின்றனர் (Logan).
இந்த அராபிய வர்த்தகர்களுக்கு பிறந்த குழந்தைகளோ அவர்களுடைய தாய் தந்தையரோ யாருமே முஸ்லிம்கள் அல்ல. இந்த கலப்பு சந்ததியினர் பிறந்ததெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திற்கு முன்னரேயாகும்.
தொடரும்..

இந்தியாவில் இஸ்லாம்-6

இந்தியாவில் இஸ்லாம்-6

தொடர்-6 : தோப்பில் முஹம்மது மீரான்
ஆரியர்களுடைய வருகை
புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.
முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.
அதற்கு அடுத்தபடியாக, வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அணுகி ‘அரசரின்’ அடுத்தபடியான ‘வணிகர்’ பதவியை வழங்கினர். அப்படி முதல் படியாக ஆட்சியாளர்களையும், வணிகர்களையும் இருகூறுகளாகப் பிரித்தனர். அரசர் என்றும், வணிகர் என்றும், பிறகு இவ்விரு தரப்பினரையும் கொண்டு தங்கள்(ஆரியர்கள்) இவ்விருவரையும் விட உயர்வானவர்கள் என்று சம்மதிக்க செய்தனர். இவ்வாறு, முதல் தரமாக ‘பிராமணர்’, பிராமணருக்குப் பின் ‘அரசர்’, அரசருக்குப்பின் ‘வணிகர்’ – இப்படி ஜாதி முறை அற்ற சமுதாயத்தை முக்கூறு போட்டபின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களையும் வணிகத்தில் ஈடுபடாதவர்களையும் தாழ்ந்த வகுப்பினராக கருதத் தூண்டினர்.
ஜாதி முறையற்ற பண்டைய தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை செய்வதில் முதல் முறையாக வெற்றி கண்டனர். இது ஆதி சங்கராச்சாரியாருக்கு முன் நடந்த முதல் ஜாதி பிரிவினையாகும். சங்க கால சமுதாயத்தில் மேல் பதவியை அடைந்திருந்த பாணர், வேடர், குறவர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினர் அடிமட்ட மக்களாக கருதப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். இந்த திருப்பு முனையில் இருந்துதான் இந்து மதம் இங்கு போதிக்கப்பட்டதும் வளர்க்கப்பட்டதும்.
நாட்டின் ஆட்சித் தலைவர்களையும், வணிகர்களையும் தம் வசப்படுத்திய பின் ஆரியர்களின் அடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளி வைத்திருந்த மக்கள் நம்பிவந்த சமண – புத்த மதங்களை எதிர்த்து வேருடன் பிடுங்கி எறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
“ஆரிய மத பிரச்சாரகர்கள் (மிஷினரி) புத்த சிலைகளையும், புத்த கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்.” (கேரள வரலாறு: ஏ. ஸ்ரிதரமேனோன் பக்கம் 94)
“ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் கேரளத்தைப் பார்க்க வந்திருந்த பொழுது பவுத்தம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பவுத்தப் பள்ளிகள் அழிந்து கிடந்தன. அவற்றில் இந்துக் கோயில்கள் இடம் பெற்றன.” (தென்னிந்திய வரலாறு: டாக்டர் கே.கே.பிள்ளை, பக்கம் 107-108)
சமண புத்த மதங்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றை நம்பி வந்த மக்களை கொலை செய்து குவித்தனர். நாடெங்கும் ரண ஆறு பெருக்கெடுத்தது. சமண பஸ்தி (கோயில்)களையும் புத்த மடாலயங்(கோயில்)களையும் அங்குள்ள புத்தர் சிலைகளையும் உடைத்து அங்கஹீனப்படுத்தி தெருக்களில் வீசினர்.
கேரளாவில் உள்ள கருமாடி, பள்ளிக்கல் முதலிய இடங்களிலும் (நம் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலிருந்தும் இவ்வாறு) நாசம் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். (இப்படி தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திப்புசுல்தான் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.)
முசிறி என்றும், மாகோதை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடுங்கல்லூரில் தான் நீசத்தனமான கொலைகள் பெருமளவில் நடந்தன. வரலாற்றில் திடுக்கிடச் செய்யும் இப்படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அந்த இடம் ‘கொடும் கொலையூர்’ என்ற பெயரில் புகழ்பெற்றது நாளடைவில் அது கொடுங்கல்லூர் என்று மருவியது. (சேரமான் பெருமாள்: கே.கே. அப்துல் கரீம்.) இவ்வூருக்கு ‘அல்லூர்’ என்ற பெயருமுண்டு. இப்படுகொலைக்குப் பிறகு ‘கொடும் கொலை அல்லூர்’ என்றது கொடுங்கல்லூர் என்றும் மருவியிருக்கலாம்.
இப்பொழுது கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ‘பரணி பாட்டு’ (மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட கவிதை பாடுதல்) என்ற புகழ்பெற்ற கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட பாட்டு பாடுவதும், கோழிகளை பலியிட்டு இரத்தம் ஊற்றுவதும் இப்படுகொலைகளை நினைவுபடுத்தும் சடங்காகும்.
“அவர்கள் (சங்கராச்சாரியாரும் தோழர்களும்) சதுற்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமண மதத்தை தத்துவ ரீதியாக சேர நாட்டில் பரப்பினர். சமண மதத்தின் வேரை முதலில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு அவர்கள் கைக்கொண்ட வழி பாராட்டுக்குரியதாக இல்லை. அவ்வழிகளை பிரதிபலிப்பது கேரளத்தில் சில கோவில்களில் (கொடுங்கல்லூர் முதலிய) உற்சவத்தை ஒட்டி நடத்திவரும் சடங்குகளில் காணப்படுவது” (டி.எச்.பி. செந்தாரச்சேரி: ‘கேரள சரித்திர தார’ பக்கம் 136)
கிறித்தவர்களும் யூதர்களும் வந்து முதலில் தங்கியது கொடுங்கல்லூரிலாகும். இதைப் போல் ஆரியர்களும் முதலில் வந்து தங்கியதும் இங்குதான். கொச்சி – வியாபார மையமாக மாறுவதற்கு முன் சேர நாட்டின் தலைநகராகவும், வியாபாரக் கேந்திரமாகவும் கொடுங்கல்லூர் விளங்கிவந்தது. மட்டுமின்றி இது ஒரு துறைமுகமும் கூட. அதனால்தான் அராபியர் உட்பட வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் கொடுங்கல்லூரை தங்கள் தங்குமிடமாகத் தேர்வு செய்தனர்.
“அவர்கள் (அராபியர்) நகரின் (கொடுங்கல்லூர்) ஒரு பகுதியில் சொந்தமாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலோ எட்டாம் நூற்றாண்டிலோ இஸ்லாம் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தது இந்த அராபிய வியாபாரிகளாக இருக்கலாம். கிறித்துவ மதத்துடன் ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது.”

இந்தியாவில் இஸ்லாம்-5

இந்தியாவில் இஸ்லாம்-5

வரலாற்றுத் தொடர்:5 – தோப்பில் முஹம்மது மீரான்
இருமதங்களின் அழிவு…!
கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை.
கி.பி.எட்டாவது நூற்றாண்டில் ஆரிய மதத்தின் இரு பிரிவுகளான சைவ வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவமும் வைணவமும் இணைந்து சமண புத்த மதங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இன்று காணப்படும் பகவதிக் கோயில் தென்னாட்டில் சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியதாகும். அக்கோயிலில் இருந்த ‘பத்மாவதி’ சிலையை பகவதி சிலையாக மாற்றி இந்துக்கள் வசப்படுத்தி விட்டனர்.
உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். (மாத்ருபூமி வார இதழ் வாசகர் பகுதி 1989 ஜூலை 2-8) அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது ‘சிதறால் அம்மா’ என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதுபோன்று நாகர்கோவிலில் உள்ள ‘நாகர் அம்மன்’ கோயில் ஒரு சமணக் கோயிலாகும். கி.பி.1589-க்குப் பின் இது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது. அக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் குணவரே பண்டிதர் என்றும் கமல வாகன பண்டிதர் என்று இரு சமண அறிஞர்கள் இருந்து வந்தனர். இந்துக் கோயிலாக மாற்றப்பட்டதும் துளு நாட்டைச் சார்ந்த போற்றிமார் (பிராமணர்கள்) அங்கு பூஜாரிகளாக பொறுப்பேற்றனர். (கேரள வரலாறு: ஏ.ஸ்ரீதரமேனோன் பக்கம் 87)
வயநாடு காட்டிற்குள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிங்ஙேரத் தேவரையும் செல்வரத் தேவியையும் பிரதிஷ்டை செய்துள்ள கோயில், இந்துக் கோயில் மாற்றம் செய்த சமணக் கோயிலாக என்று தெரிய வந்துள்ளது (மாத்ருபூமி வார இதழ். டாக்டர் நெடுவட்டம் கோபால கிருஷ்ணன் 1989).
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் சமணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புத்த மதம், சங்க காலத்தில் அதன் முழு வளர்ச்சியை அடைந்திருந்தது. ‘மணிமேகலை’ புத்த மத நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாகோதை என்றும் மகோரயபுரம் என்று அறியப்படும் கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சேர நாட்டு அரசரான பள்ளிபாணப் பெருமாளும் புத்த மதத்தை சார்ந்தவரேயாகும் (இவர் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்).
சபரி மலை ஐய்யப்பனும் புத்த மதத்தைச் சார்ந்த ஒரு அரசர் என்று தெரிய வருகிறது. பிற்காலத்தில் இவர் இந்து தேவனாக்கப்பட்டார்.
“சாஸ்தா, அல்லது ஐய்யப்பன் இந்து தேவனாக்கப்பட்ட புத்தன் என்றும், சபரி மலையில் உள்ள சாஸ்தாக் கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரையில் புத்தமத சடங்குகள்தான் பெருவாரியாக காணப்படுகிறது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்” என்று திரு.ஸ்ரீதரமேனோன் குறிப்பிடுகிறார் (பக்கம் 89). ‘சரணம் ஐய்யப்பா’ என்று கூப்பிடுவது புத்த மதக் கொள்கையான ‘சரணத்றணயத்தை’ நினைவு கூறுவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை வேறு பல வரலாற்று பண்டிதர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். திருச்சூரிலுள்ள வடக்குந்நாதர் கோயிலும் ‘கொடுங்கல்லூர் பரணிபாடும்’ புகழ்பெற்ற கொடுங்கல்லூர் பகவதிக் கோயிலும் புத்த பள்ளிகளாக இருந்து பிறகு இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டவைகளில் குறிப்பிடத்தக்க சிலவாகும். தமிழ் நாட்டிலும் பல புத்த பள்ளிகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன

இந்தியாவில் இஸ்லாம்-4

இந்தியாவில் இஸ்லாம்-4

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.
எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.
ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த “சுன்னத்” முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக ‘கேரளா மகா சரித்திரம்’ என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி ‘கோபால குறுபு’ குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் – கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.
இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது ‘கேரள வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.
“சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. ‘கொற்றவை’ என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்” (ஏ. சீதரமேனோன் – கேரள வரலாறு, பக்கம் 82)
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.
ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘புலயனார்’ கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.
ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்கிடையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.

இந்தியாவில் இஸ்லாம்-3

இந்தியாவில் இஸ்லாம்-3

இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
சோழநாட்டு அரசன், முதல் ராஜராஜன் காலத்தில் குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் என்ற ஊரில் ஒரு பாறை மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கீழ்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:-
5 “…………” செழியரை தேசுகொள்கோ இராசராச -
6 கேசரின் மர்க்குயாண்டு பதினைஞ்சு இவ்வாண்டு கன்னி நாயிற்று
முப்பதாந் (தேதி) செவ்வாய்கிழமை ……….” என்று காணப்படுகிறது. இங்கு எந்த ஆண்டு பொறிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அவர்(அரசர்) ஆட்சிபீடம் ஏறிய பதினைந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று மட்டுமே காணப்படுகிறது.
“This date has been Calculated and Verified by Prof.Kielhorn and the result published in the Epigraphia indica, Volume 5th P.48, as Tuesday 29th August 999 A.D.”
அந்த கல்வெட்டில் காணப்படும் வாசகத்தை பேராசிரியர் கீல்ஹான் என்பவர் கணித்து கி.பி.999 ஆகஸ்டு கன்னி மாதம் 29 தேதி செவ்வாய்க்கிழமை என்ற முடிவுக்கு வந்ததாக திரு. டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.
ஜோதிட முறையிலும், அல்லாமலும் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளே வரலாற்றில் நாம் வாசிக்கும் ஆண்டுகள். இவை உண்மையானவை என்று கூற முடியாது. இருந்தாலும் உண்மை என்று நம்பித்தான் தீரவேண்டும்.
ஜோதிட மூலமும் அல்லாமலும் கணித்து எழுதிய ஆண்டுகளில் எவ்வளவோ தவறுகள் நடந்ததுண்டு. கேரளாவில் ‘திருவல்லம்’ என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டில் காணப்படும் ஆண்டின் நடுவிலுள்ள எண் தெளிவில்லாமல் இருந்தது. இதை 319வது ஆண்டு என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். 399 என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் அதை திருத்தம் செய்தார்.
இதில் எது சரி? எது தவறு? 80 ஆண்டுகளுடை இடைவெளி. பிறகு அக்கல்வெட்டில் உள்ள வாசகம் ஒன்றை எடுத்து சோதிட அடிப்படையில் கணக்கிட்டனர். “விருச்சிகத்தில் வியாழன் நின்றயாண்டு மகர ஞாயிற்று செய்த காரியமிது” என்று சொல்லில் வரும் வியாழனுடைய நிலையை கணக்கிட்டு 399 என்ற முடிவுக்கு வந்தனர். (பேராசிரியர் இளம்குளம் குஞ்சன் பிள்ளை – ‘கேரள வரலாற்றின் இருள் சூழ்ந்த ஏடுகள்’ பக்கம்-139.)
இப்படி பெரும்பான்மையான ஆண்டுகள் எல்லாம் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளேயன்றி உண்மையான ஆண்டுகள் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று சில ஊர் பெயர்களும் சில மன்னர்களுடைய பெயர்களும் திட்டவட்டமாக உறுதி செய்யப்படாதவை.
ஒரே மன்னரை பல பெயர்களில் குறிப்பிடுவதையும் அதே மன்னர் வேறுபட்ட காலங்களில் ஆட்சி புரிந்து வந்ததாகக் குறிப்பிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகையால் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளை உண்மை என நம்பி நாம் வரலாறுகளை அணுகுவது சரியாகப்படவில்லை.
கொல்லம் ஆண்டு (A.D.825) துவங்குவதற்கு முன்னும் ஓர் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான ஓர் ஆண்டு பண்டைய தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாமலிருந்ததுதான் இந்தக் குழப்ப நிலைகளுக்கு அடிப்படைக் காரணம்.
கிறிஸ்தவ ஆண்டையோ, அதற்குப் பின் வந்த கொல்லம் ஆண்டையோ எந்த அரசரும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதேனும் அரசர் பதவி ஏற்றது முதல் அவர் பதவி விட்டு இறங்கியது வரையிலான வருடங்களை நடைமுறைப்படுத்தினர். இதனால்தான் 10-வது நூற்றாண்டு முன் உள்ள ஆண்டுகளை சரியான முறையில் குறிப்பிட்டு எழுத முடியாமல் போய் விட்டது.
“After doing all this the perumal left the sandy island of Tirunavayi with the people of the veda and descended from a ship at kodungallur harbour and entered the palace of kodungallur with a view to proceed to Mecca (Cheramran embarked for Mecca with the people of veda) it was in the Kali Year(A.D.355)
(Malabar manuel by willian Logan, P.279, A.D.355)
இவ்வாறு ‘கேரள உற்பத்தி’ என்ற பண்டைக்கால கேரள வரலாற்று நூலில் குறிப்பிட்டிருப்பதாக லோகன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். கலி ஆண்டை கணக்கிட்டு ‘கேரளா உற்பத்தி’ நூலாசிரியர் ஏ.டி.355-ல் சேரமான் பெருமாள் என்ற சேரநாட்டு அரசர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்காக கொடுங்கல்லூர் துறைமுகத்திலிருந்து கப்பலேறி பயணமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கலி ஆண்டிற்கு சமமான கி.பி.ஆண்டை கணக்கிட்டபோது தவறு நடந்ததாகத் தெரிகிறது. கி.பி.579-ல் தானே பெருமானார்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபி பெருமானார்(ஸல்) அவர்கள் பிறப்பதற்கும் 224 ஆண்டுகளுக்கு முன் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக மக்கா பயணமானார் என்று குறிப்பிடும் ஆண்டில் எவ்வளவு தவறுகள் வந்துள்ளது என்று புலனாகிறது அல்லவா.
இதே போன்றுதான் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த பள்ளி பாண பெருமாள் என்று சேரமன்னர் முதற்கொண்டு முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளான சேரமான் பெருமாள் நாயனார் வரையிலான நீண்ட இரண்டு நூற்றாண்டுகளில் வருடங்களில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தொடர்ச்சியான ஒரு ஆண்டை பின்பற்றி வராததும், இந்த நூற்றாண்டுகளை இருண்ட காலமென உதாசீனப்டுத்தியதுமேயாகும்.

இந்தியாவில் இஸ்லாம்-2

இஸ்லாம்தளம்

இந்தியாவில் இஸ்லாம்-2

கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்
சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.
இங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
தென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.
நம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.
நிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு?
இந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.
இந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.
மக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.
ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.
முஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.
சில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.
சமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.
இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.
சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும்? நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.
1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.

இந்தியாவில் இஸ்லாம்-1

இந்தியாவில் இஸ்லாம்-1

தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும்.
‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள்.
தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் வடிவமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவருடன் நானும் பங்குக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனது உரையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் முன்பு நடத்தி வந்த ‘உங்கள் தூதுவன்’ மாத இதழில் தான் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளை நினைவு கூர்ந்து பேசினார் தோப்பில் மீரான். அந்த உரையை கேட்ட நான் நீங்கள் இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு தொடரை தமிழகத்தில் வரும் முஸ்லிம் தமிழ் இதழ்களில் அதிகம் விற்பனையாகும் ‘மக்கள் உரிமை’ இதழில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பயனாகவே இந்த இதழில் அந்த தொடர் ஆரம்பமாகிறது.
இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு என்று இப்புதிய வரலாற்றுத் தொடரில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை அறிய வேண்டிய அரிய செய்திகளை கல்வெட்டுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகளுடன் இக்கட்டுரை தொடரில் வழங்க உள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.
- பேராசிரியர்: எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், வெளியீட்டாளர்
இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.
இதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.
தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.
ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.
சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.
அந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.
இந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.
வெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.

ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டால் உள்ள நன்மையும் அதில் ஓதப்படும் பிரார்த்தனைகளும்

ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டால் உள்ள நன்மையும் அதில் ஓதப்படும் பிரார்த்தனைகளும்

Filed under: பகுக்கப்படாதது — islamthalam @ 12.24
எழுதியவர்/பதிந்தவர்/உரை .v.s.m.samsul alam .usmani
ஒரு மையித்துக்கு தொழுகை நடத்தப்படும் வரை யாராவது அந்த ஜனாஸாவில் கலந்துகொண்டால் அவருக்கு ஒரு கீராத்து நன்மையும், மையத்து அடக்கப்படும் வரை கலந்து கொண்டால் அவருக்கு இரு கீராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கீராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது, இரண்டு பெரும் மலையளவு என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
முதல் தக்பீரில் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்.
இரண்டாம் தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறவேண்டும்.

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اللَّهُمَّ َبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ. -البخاري
மூன்றாம் தக்பீரில் பின்வரும் துஆவை ஓதவேண்டும்.

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزْلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَعَذَابِ النَّارِ
(مسلم)

اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ، اَللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهً وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ
(ابن ماجه، أحمد)
மையித்து சிறு குழந்தையாக இருந்தால்

اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا، وَسَلَفًا، وَأَجْرًا
(موقوف عن الحسن، أخرجه عبد الرزاق)
நான்காவது தக்பீரில்

اَللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ وَلاَ تَفْتِنَّا بَعْدَهُ وَاغْفِرْ لَنَا وَلَهُ

நிலமெல்லாம் ரத்தம் -

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 36

இந்தியாவில் உள்ள மணிப்பூர் அல்லது மேகாலயா அளவேயான நிலம்தான் பாலஸ்தீன். சரித்திர காலத்து நிலப்பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்வதென்றால்கூட தமிழ்நாட்டு அளவை மிஞ்சும் சாத்தியம் இல்லை. ஆனால் இந்தச் சிறியதொரு நிலத்தை முன்வைத்து எத்தனை அரசியல்கள்! சரித்திர காலத்துக்கும் நவீன காலத்துக்கும் இடைவழியான கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிகள், பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில் எல்லாம் இந்த அரசியல் நம்பமுடியாத வேகம் எடுத்ததைக் குறிப்பிட வேண்டும். மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவெங்கும் மக்கள் மூச்சுக்கு முந்நூறு முறை யூதர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசப்பட்ட இடங்களிலெல்லாம் காற்றைப்போல யூதர்களும் பரவியிருந்தார்கள். நிலையான இருப்பிடம் என்று ஒரு பிரதேசம் அவர்களுக்கு இல்லை என்றாலும் இருக்கிற இடங்களிலெல்லாம், கிடைக்கிற தொழில்களில் எல்லாம் அவர்கள் ஒட்டிக்கொண்டு ஒரு மாபெரும் புரட்சிக்கும் போராட்டத்துக்கும் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். எல்லாமே மிக மௌனமாக நடந்தது. மிகமிக ரகசியமாக நடந்தது.

வாழ்க்கைப் பிரச்னைகள் அவர்களை ஊரைவிட்டு ஓடச் செய்தாலும் விருப்பம் முழுவதும் பாலஸ்தீனில் மட்டுமே இருந்தது. குறிப்பாக, ஜெருசலேம். அப்போது ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்த ஜெருசலேம். ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீனுக்குத் திரும்பி வரவேண்டும், அது தங்களது சொந்த நிலப்பரப்பு என்பதை அதிகாரபூர்வமாக ஸ்தாபிக்க வேண்டும், அங்கேயே வாழவேண்டும் என்கிற விருப்பம் ஒரு தீ போல அவர்கள் மனமெங்கும் பரவி தகித்துக்கொண்டிருந்தது.

யுத்தகாலங்களில் அம்போவென்று ஊரைவிட்டுப் புறப்பட்டு ஓடிப்போன குற்ற உணர்ச்சியெல்லாம் அவர்களிடம் இல்லை. அரேபியர்கள்தான் எதிரிகளிடம் நூற்றாண்டு காலமாகப் போராடிக் கொண்டிருந்தார்கள் என்கிற நியாய உணர்ச்சியும் இல்லை. சுல்தான் சலாவுதீன் காலம் தொட்டு பாலஸ்தீனின் விடுதலைக்காக அரேபிய முஸ்லிம்கள் எத்தனை பாடுபட்டிருக்கிறார்கள், வீடு வாசல்களை இழந்தும் அங்கேயே நின்று போராடியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை.

கடவுளின் பிரதேசமான பாலஸ்தீன், கடவுளின் விருப்பக் குழந்தைகளான யூதர்களுடையது. அவ்வளவுதான். அது மட்டும்தான் அவர்களின் எண்ணமாக இருந்தது.

இந்த எண்ணம் மிகவும் வலுப்படத் தொடங்கியதற்கு யூதரல்லாத ஓர் ஐரோப்பியச் சக்ரவர்த்தி ஒரு மறைமுகக் காரணமாக இருந்திருக்கிறார். நெப்போலியன். தெரியுமல்லவா? நெப்போலியன் போனபார்ட்.

(ழிணீஜீஷீறீமீஷீஸீ ஙிஷீஸீணீஜீணீக்ஷீtமீ).

அந்தக் காலத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மன்னர்கள் யூதர்களை நடத்திய விதத்துக்கும், பிரான்ஸின் நிகரற்ற பேரரசராக விளங்கிய நெப்போலியன் அவர்களை நடத்தியதற்கும் நம்பமுடியாத வித்தியாசங்கள் இருக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு பிரான்ஸில் யூதர்களுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. நெப்போலியன் ஆட்சிக்கு வந்தபிறகு அவர்களுக்குக் கொஞ்சம் துணிச்சல்கூட வந்தது.

இத்தனைக்கும் ஒருமாதிரி வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுதந்திரத்தையும்தான் நெப்போலியன் அவர்களுக்கு வழங்கியிருந்தார். ஆண்டாண்டு காலமாக ஐரோப்பாவில் வசித்தாலும் யூதர்கள், அந்த தேசங்களின் வளமைகளிலோ, அரசியல் சாசன உரிமைகளிலோ பெரிய அளவில் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் அவர்களது குடியேற்ற உரிமைகள் காப்பாற்றப்படும். பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள் என்கிற அளவில் அவர்களது இருப்பு அங்கீகரிக்கப்படும். அதற்கு அப்பால் வேறு எதற்கும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது.

பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள். இது போதாது யூதர்களுக்கு? அது மட்டும் தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தால் போதும் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அவர்களே இதனைச் சொல்லிக்கொண்டிருப்பதற்கும் நெப்போலியன் போனபார்ட் போன்ற ஒரு சக்ரவர்த்தி சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன அல்லவா? என்றைக்கு இருந்தாலும் பாலஸ்தீன்தான் யூதர்களின் சொந்தபூமி, எத்தனை நூற்றாண்டுகள் அவர்கள் அங்கிருந்து வெளியேறி வாழ்ந்தாலும் எப்போது திரும்பினாலும் அங்கே உரிமை உண்டு என்பதை திரும்பத்திரும்ப அழுத்தந்திருத்தமாக நினைவுபடுத்திக்கொண்டே இருக்க, நெப்போலியனின் அந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனம் யூதர்களுக்கு உறுதி செய்தது.

நெப்போலியனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் யூதர்களுக்கு முழு சிவில் உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனாலும் அது குடியேறிகளுக்கான உரிமைகளாக மட்டுமே சொல்லப்பட்டது. வழிபாட்டுச் சுதந்திரம், வர்த்தகச் சுதந்திரம், வாழ்க்கைச் சுதந்திரம் எல்லாம் இருந்தன. ஒவ்வொன்றும் அவர்கள் பாலஸ்தீன்காரர்கள் என்று சொல்லிச் சொல்லி வழங்கப்பட்டது.

கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும். நெப்போலியன், ஒரு பாதுகாப்புக் கருதியே யூதர்களைத் தொடர்ந்து பாலஸ்தீன்காரர்கள், வந்தேறிகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லிவந்திருக்கிறார். அதாவது பிரெஞ்சுக்காரர்களின் பாதுகாப்பு. யூதர்கள் அங்கே மெஜாரிடிகளாக ஆகி, பெரிய அளவில் பிரச்னைக்கு வித்திட்டுவிடக் கூடாதே என்கிற பாதுகாப்புணர்வு. ஆனால் யூதர்களைப் பொறுத்த அளவில் இதை வேறு விதமாக எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

ஐரோப்பாவில் வேறு எந்தப் பகுதியிலும் வாழக்கூட முடியாத சூழ்நிலை அவர்களுக்கு. எங்கே போனாலும் உதைத்தார்கள். எந்த ஒரு கிறிஸ்துவ தேசத்திலும் அவர்களுக்கு நிம்மதி இல்லாத சூழ்நிலை. அப்படிப்பட்ட காலகட்டத்தில், வந்தேறிகள் என்று சொல்லியாவது இந்த நெப்போலியன் வாழ வழிகொடுக்கிறாரே என்கிற ஆறுதல் ஒரு பக்கம்; அதிர்ஷ்டப்பரிசு மாதிரி ‘பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள்’ என்று திரும்பத்திரும்பச் சொல்கிறாரே, அந்த இடம் நம்முடையதுதான் என்பதை இதுவே உலக மக்கள் மனத்தில் பதியச் செய்கிறதே என்கிற ரகசிய சந்தோஷம் இன்னொரு புறம்.

கி.பி. 1799-ல் நெப்போலியன் எகிப்திலிருந்து சிரியா நோக்கி படை நகர்த்திச் சென்றுகொண்டிருந்தார். நெப்போலியனின் போர்த்திட்டங்கள், நாடு பிடிக்கும் வேட்கை போன்ற விஷயங்களெல்லாம் மிகப்பெரிய கதை. பாலஸ்தீன் சரித்திரத்துடன் சம்பந்தப்படாதது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட படையெடுப்பு மட்டும் சம்பந்தம் கொண்டது என்பதால் இதனைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

நெப்போலியனின் அப்போதைய நோக்கம், இன்றைக்கு சிரியாவிலும் அன்றைக்கு பாலஸ்தீனிலும் இருந்த ஏக்ர் நகரக் கோட்டையைப் பிடிப்பது. சரித்திரகாலம் தொட்டு மிக முக்கியமான நகரமாகக் கருதப்பட்டு வந்தது ஏக்ர். (கிநீக்ஷீமீ.)

மாபெரும் வீரர்; மிகப்பெரிய படை வைத்திருப்பவர் என்றாலும் அந்த முற்றுகை நெப்போலியனுக்கு வெற்றி தரவில்லை. காரணம், துருக்கியப் படைகள், அப்போது பிரிட்டிஷ் படைகளின் ஒத்துழைப்புடன் நெப்போலியனை எதிர்த்து நின்றது.

இதுவும் மிக முக்கியமானதொரு நிகழ்வு. முதல் முறையாக பாலஸ்தீன் பிரச்னையில் அப்போதுதான் பிரிட்டன் தலையிடுகிறது. அதுவரை பிரிட்டன் கவனத்துக்கு உட்பட்ட பிரதேசமாக பாலஸ்தீன் இல்லை. பிரிட்டனின் ராணி எலிசபெத், ‘கிறிஸ்துவரல்லாத யாரும் பிரிட்டனில் வாழ லாயக்கற்றவர்கள்’ என்று யூதர்களைக் குறிவைத்து அறிவித்திருந்த சமயமும் கூட அது.

ஏக்ர் கோட்டையைப் பிடிக்கும் எண்ணத்துடன் எகிப்திலிருந்து இன்றைய இஸ்ரேல் வழியே புறப்பட்டு வந்த நெப்போலியன், அப்போது ரமல்லாவில் தங்கியிருந்தார். யாசர் அரஃபாத் தமது இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்த நகரம். ரமல்லாவில் சும்மா இருக்கும் நாட்களை வீணாக்க வேண்டாம் என்று அவர் அங்கிருந்த யூதர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறிய அணிவகுப்புடன் கூடிய ‘நீதி கேட்கும் நெடும்பயணத்தை’ மேற்கொண்டார். அந்தப் பேரணியின்போது அவர் அறிவித்தார்: “யூதர்களே, எனக்கு உதவுங்கள். துருக்கியப் படையை நான் வெற்றி கொள்ள முடியுமானால் நீங்கள் நிம்மதியாக உங்கள் ஜெருசலேத்துக்குத் திரும்புவதற்கு நான் உதவி செய்கிறேன்’’

இது ஒரு ராஜதந்திர அறிவிப்புத்தான் என்றாலும் யூதர்களுக்குப் பரவசமூட்டப் போதுமான அறிவிப்பாக இருந்தது. ஏராளமான யூதர்கள் அப்போது நெப்போலியனின் படையில் இணைந்ததாகப் பல வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. பெரெக் ஜோஸ்லெவிச் (ஙிமீக்ஷீமீளீ யிஷீsமீறீமீஷ்வீநீக்ஷ்) என்கிற புகழ்பெற்ற யூத வீரர், அப்போது நெப்போலியனின் ஒரு படையில் சாதாரண வீரராகச் சேர்ந்தவர். பின்னாளில் அவரது படையில் கர்னல் அளவுக்கு உயர்ந்து, ஆஸ்திரியப் போரில் உயிர் துறந்தவர்.

ஆனால் ஏக்ர் கோட்டைக்கான யுத்தத்தில் நெப்போலியன் தோல்வியடைய நேரிட்டபிறகு, யூதர்கள் விஷயத்தில் அவர் அத்தனை ஆர்வம் செலுத்தவில்லை.

சரியான காரணங்கள் ஏதுமில்லை என்றபோதும் அவருக்கும் யூதர்கள் மீது கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது உண்மை. அவர்களுக்கு வழங்கியிருந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரத்திலேயே நிறைய புதிய வரையறைகளைச் சேர்த்தார். குறிப்பாக, நெப்போலியனின் இறுதிக்கால ஆட்சி சமயத்தில் யூத வர்த்தகர்கள் ஏராளமான வரிச்சுமைக்கு ஆளாக நேர்ந்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில், பல மானியங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கொஞ்சம் வாலை நறுக்கி வைக்கலாம் என்று நெப்போலியனுக்கும் ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. ஆனாலும் அப்படித்தான் அவர் நடந்துகொண்டார்!

ஆனால் அவரது காலத்தில் போலந்து, லித்துவேனியா, பிரான்ஸ், (ஜெர்மனியிலுள்ள) ஹாம்பர்க் நகரம், போன்ற இடங்களில் சரசரவென்று யூதர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போனது. எங்கிருந்துதான் இவர்கள் வருகிறார்களோ என்று வியந்து முடிப்பதற்குள்ளாகவே பல லட்சக்கணக்கான யூதர்கள் அந்தப் பகுதிகளில் குடியேறிவிட்டார்கள்.

அப்போது ரஷ்யாவும் நிலப்பரப்பு விஸ்தரிப்பில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தில் அப்போது நெப்போலியனுக்கு நிகரான ஆர்வம், ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் (ஞீணீக்ஷீ) மன்னர்களுக்கும் இருந்தது. (ஜார் என்பது ஒரு குறிப்பிட்ட மன்னரின் பெயர் அல்ல. அது ஒரு வம்சத்தின் அடையாளப்பெயர். ஜார் என்ற பட்டத்துடன் பல மன்னர்கள் ரஷ்யாவை ஆண்டிருக்கிறார்கள்.) கி.பி. 1772 தொடங்கி, 1815-ம் ஆண்டு காலகட்டத்துக்குள் போலந்து, லித்துவேனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டன.

யூதர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட காலகட்டம் கொஞ்சம் சாதகமாக இருந்தது. அன்றைய ரஷ்ய அரசுத்தரப்பின் மிக முக்கிய நபராக விளங்கிய இளவரசர் பொட்ம்கின் (றிஷீtமீனீளீவீஸீ), சிலபல அரசியல் காரணங்களை உத்தேசித்து, யூத ஆதரவு நிலை எடுத்தார். ஐரோப்பாவில் வாழமுடியாத யூதர்களெல்லாம் ரஷ்யாவுக்கு வந்து, அதன் தென்பகுதி மாகாணங்களில் (அவை யாவும் குட்டி நாடுகள்!) வாழத்தொடங்கலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார். (இதே ரஷ்யாவிலிருந்து இன்னும் கொஞ்சகாலத்தில் அத்தனை யூதர்களும் அடித்துத் துரத்தப்படவிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.)

அப்போதைய ஜார் மன்னரின் பெயர் கேதரின் 2. மகா கேதரின் என்று அவர் தம்மைச் சொல்லிக்கொண்டார். மக்கள் சொன்னார்களா என்று தெரியவில்லை. அவரது விருப்பத்தின்படி, இளவரசர் பொட்ம்கின், ரஷ்யப் படையில் ஒரு யூதப்பிரிவை உருவாக்கினார். இந்தப் படை உருவாக்கப்பட்டதன் ஆதார நோக்கமே, துருக்கியுடன் ஒரு யுத்தத்தை உத்தேசித்துத்தான். திரும்பத்திரும்ப துருக்கி. திரும்பத்திரும்ப பாலஸ்தீன் ஆசைக்கனவு. முன்பு நெப்போலியன் என்றால் இப்போது ஜார். அவ்வளவுதான் வித்தியாசம்.

அந்த யூதப் படைப்பிரிவுக்கு பொட்ம்கின், இஸ்ரேலவ்ஸ்கி (மிக்ஷ்க்ஷீணீமீறீஷீஸ்sளீஹ்) என்று பெயரிட்டார். இதுவும் ஒரு அரசியல் காரணத்தை உத்தேசித்துத்தான். இஸ்ரேல் என்றொரு தேசம் குறித்தெல்லாம் யூதர்கள் அப்போது சிந்திக்கக்கூட இல்லை. ஆனாலும் இனத்தின் பெயரால் அவர்களை ஒருங்கிணைத்து, இடத்தின் பெயரால் வழி நடத்த இது ஒரு உபாயமாகப் பயன்படும் என்று கருதிய ரஷ்ய இளவரசர், புராதன ஹீப்ரு பைபிளில் வரும் இஸ்ரவேலர்களின் புத்திரர்களை நினைவு கூர்ந்து இப்படியொரு பெயர் சூட்டி யூதர்களைப் புளகாங்கிதமடையச் செய்தார்.

1768-லிருந்து 1774 வரை ஒரு யுத்தம். பிறகு 1787-லிருந்து 1792 வரை ஒரு யுத்தம். ஆக மொத்தம் துருக்கியுடன் இரண்டு யுத்தங்கள். இரண்டுமே வெற்றி பெறவில்லை. மாறாக ஒட்டுமொத்த அரேபிய முஸ்லிம்களுக்கும் யூதர்கள் நிரந்தரப் பகைவர்களாவதற்கு பெரிய அளவில் ஒரு பிள்ளையார் சுழியைப் போட்டுவைத்தன.

இத்தனைக்கும் ஒட்டாமான் துருக்கிய மன்னர்கள் யூதர்களுக்கு எத்தனையோ வசதிகள் செய்துதந்து, பாலஸ்தீன் உள்பட துருக்கியப் பேரரசின் அத்தனை இடங்களிலும் சர்வ சுதந்திரமுடன் வாழ அனுமதித்திருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பாலஸ்தீனை அவர்கள் முழுவதுமாகத் தங்களுக்கான தனிநாடாக அடைய விரும்புகிறார்கள் என்று சிந்திக்கவேயில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 மார்ச், 2005

இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

"பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.முகம்மது நபி பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ மட்டும் இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அங்கே மட்டும் அம்மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருக்குமானால் இத்தகையதொரு விஷயம் பற்றிப் பேசவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.


இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.

மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

முகம்மது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்து சென்றது கி.பி.622-ம் ஆண்டு. பத்தாண்டுகளே அவர் மதினாவில் இருந்தார். கி.பி. 630-ல் மெக்காவை வெற்றி கொண்டதற்கு இரண்டாண்டுகள் கழித்துக் காலமாகிவிட்டார். (கி.பி.632) இந்தக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு எட்டு யுத்தங்கள் வீதம் நடந்திருந்தால்தான் எண்பது யுத்தங்கள் சாத்தியம். அரேபியாவில் அல்ல; உலகில் வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.

ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.

முகம்மதுவுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், முகம்மது ஒருவர்தான் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார். மதப்பிரசாரம் மட்டுமே அவரது பணியாக இருக்கவில்லை. மாறாக, அவர் மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நாளாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கட்டிக்காக்கும் ஒரு பெரிய இனத்தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், மதினாவின் முடிசூடாத மன்னராகவே அவர் ஆகிப்போனார்.

ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளின் யுத்தம் என்பது காலப்போக்கில் மதினா மக்களுக்கு எதிரான மெக்காவாசிகளின் யுத்தம் என்று ஆகிவிட்டது. மதினாவைத் தாண்டி இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, எங்கெல்லாம் முஸ்லிம்கள் அபாயத்தைச் சந்திக்க நேரிடுகிறதோ, அங்கெல்லாமும் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு முகம்மது நபியைச் சேர்ந்தது. கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.

அந்த மூன்று யுத்தங்களுள், பத்ரு யுத்தம் மிகவும் முக்கியமானது. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற முஸ்லிம்கள் மொத்தம் 313 பேர். எதிரிகளாக இருந்த குறைஷிகளின் படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின்மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி, வியப்புக்குரியது. (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.) ஆயிரக்கணக்கான குறைஷி வீரர்களை எப்படி வெறும் முந்நூறு முஸ்லிம் வீரர்கள் வென்றார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமான பதில் ஏதும் கிடையாது. ஆனாலும் ஜெயித்தார்கள். இந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக குறைஷிகள் தொடுத்த அடுத்த யுத்தம்தான் உஹைத் யுத்தம். (அதாவது, உஹைத் என்கிற இடத்தில் நடந்த யுத்தம்.) முகம்மது ஓர் இறைத்தூதரே ஆனாலும், இதுவும் வலிய வந்த யுத்தமே ஆனாலும் இந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முகம்மது நபியே வாளேந்தி, கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியும் முஸ்லிம்கள் இதில் தோல்வியே அடைந்தார்கள்.

மூன்றாவது யுத்தமான ஹுனைன் போருக்குக் குறைஷிகள் காரணமல்ல. மெக்கா நகரின் குறைஷி இனத்தவரின் ஜென்மப்பகையாளிகளான ஹவாஸின் என்கிற இன்னொரு அரபு இனத்தவர்களே இந்தப் போரின் சூத்திரதாரிகள். குறிப்பாக மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்கிற அந்த இனத்தலைவர்.

பத்ரு போரில் குறைஷிகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதிலிருந்தே அவருக்கு ஒரு பதற்றம் இருந்தது. தங்களது பகையாளிகள் என்றாலும், குறைஷிகள் பெரிய வீரர்கள். அவர்களையே போரில் வெற்றி கொண்டவர்கள் என்றால், முஸ்லிம்களைச் சாதாரணமாக எண்ணிவிடமுடியாது. நாளைக்கு இந்த முஸ்லிம்கள் நம்மையும் தாக்கினால் என்னாவது என்கிற தீவிர முன் ஜாக்கிரதை உணர்வுடன் தாமாகவே வலிந்து தம் இனத்தவரைத் திரட்டி, தோழமையான பிற சாதியினரையும் உடன் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யக் கிளம்பினார் மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி.

ஒரு முழு நாள் நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.இந்த மூன்று யுத்தங்கள்தான் முகம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட யுத்தங்கள். இவை தவிர உஷைரா யுத்தம், அப்வா யுத்தம், சவீக் யுத்தம், சஃப்வான் யுத்தம், துமத்துல் ஜந்தல் யுத்தம், தபுக் யுத்தம், ஜாத்துர் யுத்தம், நுலைர் யுத்தம் என்று ஏராளமான யுத்தங்கள் நடந்ததாக மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும் இந்த யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. சில சந்தர்ப்பங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்தது உண்மையே. ஆனால் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் யுத்தம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் சில யுத்தக்களங்களில் முகம்மது நேரில் கலந்துகொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டு, யுத்தம் செய்ய வந்தவர்கள் பின்வாங்கிப் போனதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

முகம்மது நபி ஒரு சிறந்த போர் வீரரா, யுத்த தந்திரங்கள் அறிந்தவரா என்பது பற்றிய போதுமான ஆதாரங்கள் ஏதும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு பெருந்தலைவராக அவர் இருந்தபடியால் இயல்பாகவே அச்சம் கலந்த மரியாதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் இருந்திருக்கிறது. அதே சமயம், முகம்மதின் தோழர்கள் பலர் மாபெரும் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னாளில் கலீஃபாக்களான உமர், அலி போன்றவர்கள், போர்க்களங்களில் காட்டிய வீரத்துக்காகவே இன்றளவும் நினைக்கப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள். (முகம்மது நபியின் காலத்துக்குப்பின் நடந்த யுத்தங்கள் பிறகு வரும்.)இவை ஒருபுறமிருக்க, தொடர்ந்து போர் அச்சுறுத்தல்களும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருந்ததால் மதினாவில் நிரந்தர அமைதிக்கான ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டிய கட்டாயம் முகம்மதுவுக்கு ஏற்பட்டது. மதத்தலைவராக அல்லாமல், ஓர் ஆட்சியாளராக இதனைச் செய்யவேண்டிய கடமை அவருக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முகம்மது ஓர் உபாயம் செய்தார். மெக்காவிலிருந்து அவருடன் மதினாவுக்கு வந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும், மதினாவாழ் மக்கள் தம் உறவினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதாவது, முகம்மதுவுடன் மெக்காவிலிருந்து வந்த ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குழந்தையையும், ஒவ்வொரு மதினாவாசியும் தம் உறவினராக மானசீகமாக சுவீகரித்துக்கொள்வது. இதன்மூலம் மெக்கா முஸ்லிம்களுக்கும் மதினா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏதும் உண்டாகாது. பொது எதிரி யாராலாவது பிரச்னை வந்தாலும் இரு தரப்பினரும் இணைந்தே எதிர்கொள்வார்கள்.

அடுத்தபடியாக மதினாவாழ் யூதர்கள். முன்பே பார்த்தபடி அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும் அதிகரித்துவிட்டிருந்தது. ஆகவே முகம்மது நபி, மதினாவில் வசிக்கும் யூதர்கள், அங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்; ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே வெளியிட்டார். அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன.

"நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது."

"முகம்மது நபி, ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக வெளியிட்ட முக்கியமான முதல் அறிக்கை இது.

முகம்மது நபிக்குப் பின்னால் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்தின் வழியெங்கும் பின்னால் உலகெங்கும் ஆண்டு மறைந்த எத்தனையோ பல முஸ்லிம் மன்னர்களோ, சக்ரவர்த்திகளோ இந்தளவுக்கு மத நல்லிணக்கத்துடன் ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை. குறிப்பாக, யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில், முகம்மதுவின் இந்த அறிக்கைப் பிரகடனம், அவர்களாலேயே நம்ப முடியாதது.

இந்த அறிக்கைக்குப் பிறகு, முகம்மது எதிர்பார்த்தபடி மதினாவாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்களுடன் நல்லுறவைத் தொடர்ந்திருப்பார்களேயானால், பின்னாளில் உறங்க ஒரு நிலமில்லாமல் உலகெங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்காது என்று தோன்றுகிறது. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றியே யூதர்களுக்கான தனி தேசம் சாத்தியமாகியிருக்கலாம்.

ஏனெனில், கலீஃபா உமரின் காலத்தில் முதல்முதலாக ஜெருசலேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது, மதினாவில் முகம்மதுநபி யூதர்களின் உரிமைகளாக எதையெதையெல்லாம் வகுத்தாரோ, அதையெல்லாம் அப்படியே கடைப்பிடித்தார்கள். யூதர்களும் முஸ்லிம்களும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான் என்பதைத் தமது பல்வேறு நடவடிக்கைகளின்மூலம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டி, யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் கூடாது என்று உமர் வலியுறுத்திச் சொன்னார். தங்களது சுதந்திரம் என்பது, தனியான யூததேசம்தான் என்பதை அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச் சொல்லியிருந்தால்கூட ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.

மாறாக, முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த ஆட்சிக்கு உட்பட்ட அளவில் சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்கொண்டு, பின்னால் மறைமுகமாகச் சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கியபோதுதான் யூதர்களின் இருப்பு பிரச்னைக்குள்ளானது.

எப்போதும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்குப் பேர்போன யூதர்கள், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் ஏன் அப்படியரு முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கு விடையில்லாததுதான் சரித்திர வினோதம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 ஜனவரி, 2005

சிலுவைப்போர் தொடக்கம்

சிலுவைப்போர் தொடக்கம்

முகம்மது நபியின் வழித்தோன்றல்களான முதல் தலைமுறை கலீஃபாக்கள் எத்தனைக்கு எத்தனை மத மோதல்கள் உண்டாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்களோ, அதே அளவு தீவிரத்துடன் மோதலில் காதல் கொண்ட சுல்தான்களும் பின்னாளில் தோன்ற ஆரம்பித்தார்கள். கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அரேபியப் பாலைவனங்களில் சூடு அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.

ஒரு புறம் திம்மிகள் என்று வருணிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் ஆட்சியாளர்களின் திறமையின்மை காரணமாக சாம்ராஜ்ஜிய நிர்வாகத்தில் ஏராளமான குளறுபடிகள் தோன்ற ஆரம்பித்தன. பிராந்தியவாரியாக ஆள்வதற்கென்று நியமிக்கப்பட்டிருந்த கவர்னர்களில் பலர், தமது பிராந்தியத்துக்குத் தாமே சுல்தான் என்பதாக நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஆடத் தொடங்கினார்கள். அவர்களைக் கண்காணிக்கவோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ செய்யாமல் சுல்தான்கள் எப்போதும் கொலு மண்டபத்தில் நாட்டியம் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஒரு வரியில் சொல்வதென்றால் அரசு இயந்திரம் சுத்தமாகப் பழுதாகிக் கிடந்த காலம் அது.

சுமார் முந்நூறு ஆண்டுகளாக எத்தனை தீவிரமுடனும் முனைப்புடனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பி வந்தார்களோ, அதே வேகத்தில் பிரச்னைகள் அப்போது முளைக்கத் தொடங்கியிருந்தன.

வருடம் 1094. ஆட்சியில் இருந்த முக்ததிர் என்கிற கலீஃபா அப்போது காலமானார். அவரது மகன் அல் முஸ்தஸீர் பிலாஹ் என்பவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். குணத்தில் பரம சாதுவான இந்த சுல்தானுக்கு அப்போது சாம்ராஜ்ஜியம் எதிர்நோக்கியிருந்த பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றி ஏதும் தெரியாது. ஒட்டுமொத்த அரேபியாவிலும் குறிப்பாக பாலஸ்தீன், சிரியா, ஜோர்டன், ஈரான் போன்ற இடங்களில் எந்தக் கணமும் வாள்கள் மோதும் சூழல் இருந்ததை அவர் அறியமாட்டார். அப்படியே போர் மேகம் சூழ்வதை அவர் ஒருவாறு யூகித்திருக்கலாம் என்றாலும் அதற்கான மூலகாரண புருஷர்கள் யூதர்கள் அல்ல; கிறிஸ்துவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாது.

அத்தனை ரகசியமாகத்தான் ஆரம்பித்தது அது.

எப்படி அரேபிய நிலப்பரப்பு முழுவதும் முஸ்லிம்களால் ஆளப்படும் பிராந்தியமாக ஆகிப்போனதோ, அதேபோலத்தான் அன்றைக்கு ஐரோப்பிய நிலப்பரப்பின் பெரும்பான்மையான பகுதிகளைக் கிறிஸ்துவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். எந்த இயேசுநாதரின் முதல் தலைமுறைச் சீடர்களை ஓட ஓட விரட்டியும் கழுவில் ஏற்றியும் சிறையில் அடைத்து வாட்டியும் எக்காளம் செய்தார்களோ, அதே இயேசுவின் பரம பக்தர்களாக மாறிப்போயிருந்தார்கள் ஐரோப்பியர்கள்.

முகம்மது நபியைப்போலவே இயேசுவும் ஒரு நபி. இறைத்தூதர். தம் வாழ்நாளெல்லாம் இறைவனின் பெருமையை எடுத்துச் சொல்லி, தாம் பிறந்த யூத குலத்தவரை நல்வழிப்படுத்தப் பார்த்தார்.

ஆனால் ஐரோப்பியர்கள் இயேசுவையே கடவுளாகத் தொழத் தொடங்கியிருந்தார்கள். அவர் கடவுளின் மைந்தர்தான் என்பதில் அவர்களுக்குத் துளி சந்தேகமும் இல்லை. மூட நம்பிக்கைகள், சிறு தெய்வ வழிபாடுகள், மன்னரையே வணங்குதல் போன்ற வழக்கங்கள் மிகுந்திருந்த ஐரோப்பாவில் கிறிஸ்துவம் காலூன்றிய பிறகுதான் இறையச்சம் என்கிற ஒன்று உண்டாகி, மக்களிடையே ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை குறித்த சிந்தனையே தோன்ற ஆரம்பித்திருந்தது. மேலும் போப்பாண்டவர்கள் செல்வாக்குப் பெற்று அமைப்பு ரீதியில் கிறிஸ்துவம் மிகப் பலமானதொரு சக்தியாகவும் உருப்பெற்றிருந்த காலம் அது.

சரியாகப் பத்தாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிகள். ஐரோப்பாவில் கிறிஸ்துவத் திருச்சபைகள் மிகத்தீவிரமாக ஒரு பிரசாரத்தைத் தொடங்கின. "தேவனின் சாம்ராஜ்ஜியம் உலகில் வரப்போகிறது" என்பதுதான் அது.

இந்தப் பிரசாரத்தை இருவிதமாகப் பார்க்கலாம். உலகமெங்கும் இறையுணர்வு மேலோங்கி, பக்தி செழிக்கும்; கிறிஸ்துவம் வாழும் என்கிற சாதுவான அர்த்தம் ஒருபக்கம். உலகெங்கும் உள்ள பிற அரசுகள் மடிந்து, கிறிஸ்துவப் பேரரசொன்று உருவாகும் என்கிற அரசியல் சார்ந்த அர்த்தம் இன்னொரு பக்கம்.

இந்தப் பிரசாரத்தின் உடனடி விளைவு என்னவெனில், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள், தமது தேசங்களிலிருந்து புனித யாத்திரையாக ஜெருசலேமுக்குக் கிளம்பினார்கள். இயேசு நாதர் வாழ்ந்து மரித்த புனித பூமிக்குத் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் செய்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களை உந்தித்தள்ள, அலையலையாகக் கிறிஸ்துவர்கள் ஜெருசலேத்தை நோக்கி வரத்தொடங்கினார்கள்.

அப்படித் திருத்தல யாத்திரை நிமித்தம் அரேபிய மண் வழியே பயணம் செய்து பாலஸ்தீனுக்குள் வந்த கிறிஸ்துவர்கள், அரேபியா முழுவதும் கிறித்துவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாயினர். "திம்மிகள்" என்று அவர்கள் அழைக்கப்படுவது, அவர்களுக்கான சிறப்புச் சட்டதிட்டங்கள், கூடுதல் வரிச்சுமைகள் போன்றவற்றைக் கண்டு உள்ளம் கொதித்துப் போனார்கள். ஊருக்குத் திரும்பியதும் ஜெருசலேத்துக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட தமது அனுபவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கிறிஸ்துவர்கள் அரேபிய மண்ணில் மிகவும் அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்கிற விஷயத்தை மிகத் தீவிரமாகத் தம் மக்களிடையே தெரியப்படுத்த ஆரம்பித்தார்கள். ஏதாவது செய்து ஜெருசலேமை மீட்டே ஆகவேண்டும்; அரேபிய மண்ணில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தின் கிளையை நிறுவியே தீரவேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள்.

நன்கு கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஆன்மிகச் சுற்றுலா வந்த ஐரோப்பியர்கள் மொத்தம் சில நூறு பேர்களோ, சில ஆயிரம் பேர்களோ அல்லர். கணக்கு வழக்கே சொல்லமுடியாத அளவுக்கு அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள் அப்போது. ஒரு பேச்சுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் என்று சரித்திரம் இதனைக் குறிப்பிட்டாலும் எப்படியும் சுமார் ஐம்பதாண்டுகால இடைவெளியில் பத்திலிருந்து இருபது லட்சம் பேர் வந்திருக்கக் கூடும் என்று சில கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். எந்த அரசியல் உந்துதலும் இல்லாமல் தாமாகவே ஜெருசலேத்துக்கு வந்தவர்கள் இவர்கள். இன்றைக்குப் போல் போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடையாத அக்காலத்தில் பல மாதங்கள் தரை மார்க்கமாகப் பிரயாணம் செய்தே இவர்கள் பாலஸ்தீனை அடைந்திருக்க முடியும். வழி முழுக்க கலீஃபாக்களின் ஆட்சிக்குட்பட்ட இடங்கள்தாம். தாம் கண்ட காட்சிகளையும் கிறிஸ்துவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்கிற தகவலையும் இந்த ஐரோப்பிய யாத்ரீகர்கள் ஊர் திரும்பிப் போய் தத்தம் திருச்சபைகளில் தெரியப்படுத்தத் தொடங்கியதன் விளைவாகத்தான் ஒரு யுத்தத்துக்கான ஆயத்தங்கள் அங்கே ஆரம்பமாயின.

எப்படியாவது ஜெருசலேத்தை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டே தீரவேண்டும். இயேசுவின் கல்லறை உள்ள பகுதி கிறிஸ்துவர்களின் நிலமாக மட்டுமே இருக்க வேண்டும். எனில், யுத்தத்தைத் தவிர வேறு வழியே இல்லை.

முதலில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்த திருச்சபைகள் கூடி இந்த விஷயத்தை விவாதித்தன. பிறகு அந்தந்த தேசத்து மன்னர்களின் கவனத்துக்கு இது கொண்டுசெல்லப்பட்டது. அதன்பின் அரசுத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்தார்கள். யுத்தம் என்று ஆரம்பித்தால் எத்தனை காலம் பிடிக்கும், எத்தனை பொருட்செலவு ஏற்படும் என்பன போன்ற விஷயங்கள் ஆராயப்பட்டன. என்ன ஆனாலும் இதனைச் செய்தே தீரவேண்டும், ஒட்டுமொத்த கிறிஸ்துவ தேசங்களும் இந்தப் புனிதப்பணியில் பங்காற்றியே ஆகவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

ஆட்சியாளர்கள் ஒருபுறம் யோசித்துக்கொண்டிருந்தபோதே மறுபுறம் அன்றைய போப்பாண்டவராக இருந்த அர்பன் 2 என்பவர் (Pope Urban 2) எவ்வித யோசனைக்கும் அவசியமே இல்லை என்று தீர்மானித்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான யுத்தத்துக்குத் திரளும்படி ஒட்டுமொத்த கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் அழைப்பு விடுத்தார். இது நடந்தது, கி.பி. 1095-ம் ஆண்டு.

போப்பாண்டவரின் இந்தத் தன்னிச்சையான முடிவுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அவருக்கு ஒரு நிரூபணம் தேவையாக இருந்தது அப்போது. ஆட்சியாளர்கள் அல்ல; போப்பாண்டவர்தான் கிறிஸ்துவர்களின் ஒரே பெரிய தலைவர் என்று சொல்லப்பட்டு வந்தது எத்தனை தூரம் உண்மை என்பதைத் தமக்குத் தாமே நிரூபித்துப் பார்த்துக்கொள்ளவும் இதனை அவர் ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினார்.

அந்த ஆண்டு போப் இரண்டு மாபெரும் மாநாடுகளை நடத்தினார். முதல் மாநாடு, பிளாசெண்டியா (Placentia) என்ற இடத்தில் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு, அதே 1095-ம் ஆண்டு நவம்பரில் க்ளெர்மாண்ட் (Clermont) என்ற இடத்தில் கூடியது.

இந்த இரண்டு மாநாடுகளுக்கும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் வருகை தந்தார்கள். ஒவ்வொரு ஐரோப்பிய தேச அரசும் தமது பிரதிநிதிகள் அடங்கிய பெரிய பெரிய குழுக்களை அனுப்பிவைத்தன.

இந்த மாநாடுகளில் கிறிஸ்துவர்கள் ஜெருசலேத்தை மீட்டாக வேண்டிய அவசியம் குறித்தும் அரேபிய சாம்ராஜ்ஜியத்துடன் போரிடுவதனால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், இழப்புகள், தேவைகள் பற்றியும் மிக விரிவாக, பல்வேறு அமர்வுகளில் விவாதிக்கப்பட்டன.

ஆயிரம் பேர் வேண்டும், பத்தாயிரம் பேர் வேண்டும் என்று வீரர்களின் தேவையை அத்தனை துல்லியமாகச் சொல்லிவிடமுடியாது. எல்லா கிறிஸ்துவ தேசங்களும் போரிட வீரர்களை அனுப்பியாக வேண்டும். ஆனால் எத்தனை பேரை வலுக்கட்டாயமாக அனுப்பமுடியும்? மக்களே விரும்பி வந்து போரில் பங்குபெற்றால்தான் உண்டு. அப்படி தன் விருப்பமாகக் கிறிஸ்துவர்கள் இந்தப் போரில் பங்கு பெறுவதென்றால் அவர்களுக்குச் சில சலுகைகள் அளித்தாக வேண்டும். இந்த யுத்தத்தை அரசியலாகப் பார்க்காமல் ஒரு மதக்கடமையாகச் செய்கிறோம் என்கிற பெருமிதம் அவர்களுக்கு இருக்கவேண்டும். என்ன செய்யலாம்?

போப்பாண்டவர் சில சலுகைகளை அறிவித்தார். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகத் தொடங்கப்படவிருக்கிற இந்த யுத்தத்தில் பங்குபெறும் கிறிஸ்துவர்கள் அனைவரும் திருச்சபையின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உள்ளாவார்கள். அவர்களது உறவினர்கள், வம்சம், வீடு, நிலம் அனைத்தையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு திருச்சபையினுடையது. ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் தேவையான பண உதவிகளுக்குத் திருச்சபையே பொறுப்பேற்கும். அதுவரை அவர்கள் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருந்தாலும் பிரச்னையில்லை. அதைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. வாங்கிய கடனைச் செலுத்தாமலிருப்பதற்காக அவர்கள் மீது யாரும் வழக்குத் தொடரக் கூடாது. அப்படியே தொடர்ந்தாலும் நீதி மன்றங்கள் அவற்றைத் தள்ளுபடி செய்துவிடும். அவர்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் பாக்கி வைத்திருப்பார்களேயானால் அந்த வரிகளும் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்படும். மதத்துக்காகப் போரிடப் புறப்படும் வீரர்களிடம் அரசாங்கம் வரி கேட்டு இம்சிக்கக் கூடாது.

இப்படிப்பட்ட லௌகீக உத்தரவாதங்கள் அளித்ததுடன் போப் நிறுத்தவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தினார். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மிக்க அச்சொற்பொழிவில், இறைவன் பெயரால் அவர் அளித்த உத்தரவாதங்கள் இவை:

1. ஜெருசலேத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த யுத்தத்தில் பங்கெடுக்கும் அத்தனை கிறிஸ்துவர்களின் பாவங்களும் உடனடியாக இறைவனால் மன்னிக்கப்பட்டுவிடும்.

2. இந்தப் போரில் உயிர் துறக்க நேரிடும் ஒவ்வொரு கிறிஸ்துவரும் சொர்க்கத்துக்குச் செல்லுவது உறுதி.

3. உலகில் கிறிஸ்துவம் தழைத்தோங்கும் வரை அவர்களின் பெயர் மாறாத புகழுடன் விளங்கும்.

இந்தச் சொற்பொழிவின் இறுதியில்தான் போப் அர்பன் 2, "கிறிஸ்துவர்களே, யுத்தத்துக்குத் திரண்டு வாருங்கள்" என்கிற அறிவிப்பை வெளியிட்டார். உணர்ச்சிவசப்பட்ட ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இந்த யுத்தத்தில் பங்கெடுக்க முன்வந்தது.

மத உணர்ச்சி, பொருளாதார லாபங்கள், அரசியல் நோக்கங்கள் என்கிற மூன்று காரணிகளை அடித்தளமாகக் கொண்டு பதினொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பமான இந்த யுத்தம்தான் சரித்திரத்தில் சிலுவைப்போர் என்று வருணிக்கப்படுகிறது. சிலுவைப்போர் என்பது ஒரு மாதமோ, ஓர் ஆண்டோ, சில ஆண்டுகளோ நடந்த யுத்தமல்ல. கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகள் ஓயாது தொடர்ந்த பேரழிவு யுத்தம் அது.ஜெருசலேத்தை மையமாக வைத்து கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஆரம்பமான அந்த யுத்தம் மத்தியக் கிழக்கில் உருவாக்கிய பூகம்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 13 பெப்ரவரி, 2005

அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்

அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்

(“தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?”
பகுதி : மூன்று )

“அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டியதாக” கூறும் இந்துத்வா பரப்புரை போல, “ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு ஒமார் மசூதி கட்டியதாக” சியோனிசவாதிகள் கூறுகின்றனர். ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்லாமியர்கள், அங்கிருந்த யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு மசூதி கட்டியதாகவும், அதற்கு இஸ்லாமியப் படையெடுப்பை நிகழ்த்திய ஒமாரின் நாமம் சூட்டப்பட்டதாகவும் ஒரு கட்டுக்கதை உலாவுகின்றது. யூதர்களையும், இஸ்லாமியர்களையும் மோத விட்டு குளிர்காயும் மேற்கத்திய சூழ்ச்சிக்கு சில தமிழர்களும் இரையாகியுள்ளனர். வரலாற்றை திரிபுபடுத்தி புனையப்பட்ட இந்தக் கதை, இஸ்லாமியர் மீதான பகைமையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ரோமர்கள் இடித்த யூத ஆலயத்தை, இஸ்லாமியர் இடித்தாதாக கூறுவது ஒரு வரலாற்று மோசடி. அதிலும் அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது “ஒமாரின் மசூதி” என்பது காதிலே பூச்சுற்றும் வேலை. அது ஒரு மசூதியல்ல. அதைக் கட்டியது ஒமாருமல்ல.
கி.மு. 70 ல் ரோமர்களால் ஜெருசலேம் தரைமட்டமாக்கப் பட்ட பொழுது, யூதர்களின் ஆலயம் அழிக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெருசலேமில் ரோமர்களின் அடிச்சுவட்டில் கிறிஸ்தவ ராஜ்ஜியம் பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது. கி.பி. 638 ல் இஸ்லாமியப் படைகள் ஜெருசலேமை வந்தடைந்தன. ஜெருசலேமில் மிகப் புனிதமான, இயேசுவின் தேவாலயத்தை நிர்வகித்த தலைமைப் பாதிரியார் சொப்ரோனியுஸ், இஸ்லாமியப் படைகளின் தளபதி ஒமார் முன்னிலையில் சரணடைய சம்மதித்தார். சொப்ரோனியுஸ் ஒமாருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களின் அருகில் முஸ்லிம்கள் நடமாட முடியாது என்றும், அதே நேரம் யூதர்கள் ஜெருசலேமில் வசிக்க முடியாது என்றும் எழுதப்பட்டது. (“The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In” by Hugh Kennedy) இஸ்லாமிய மதத்தில் புனித நகரான ஜெருசலேத்தின் தனித்துவம் முஸ்லிம்களால் மதிக்கப்பட்டது. ஆனால் யூதர்கள் வசிக்க முடியாது என்ற வாக்கியம் ரோமர்களின் சட்டத்தை அடியொற்றி கிறிஸ்தவ பாதிரிகளால் சேர்க்கப்பட்டது.
இஸ்லாமியத் தளபதி ஒமார், ஜெருசலேமில் இயேசுவின் தேவாலயத்தை பார்வையிட சென்ற பொழுது, தொழுகைக்கு நேரமாகி விட்டது. உடனே ஒமார் தொழுவதற்கு ஏற்ற இடம் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தலைமைப் பாதிரி, தேவாலயத்தின் ஒரு பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த ஒமார் கூறிய விளக்கம் இது: நான் இந்த இடத்தில் தொழுகை நடத்தினால், பிற்காலத்தில் முஸ்லிம்கள் தேவாலயத்திற்கு உரிமை கோருவார்கள்.” ஒமார் பின்னர் தேவாலயத்தின் வெளியே சென்று தொழுகையை நடத்தி முடித்தார். இன்றைய அல் அக்சா மசூதி அந்த இடத்திலேயே கட்டப்பட்டது. இந்தக் குறிப்புகளை அரபு-கிறிஸ்தவ சரித்திர ஆசிரியர் Said Batriq எழுதி வைத்துள்ளார். (“The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In” by Hugh Kennedy)
Ka ‘ ab al Ahbar என்ற, இஸ்லாமியராக மதம் மாறிய முன்னாள் யூத மதகுரு, யூதர்களின் இடிந்த ஆலயம் இருந்த இடத்தில் மசூதி கட்டுமாறு, ஒமாருக்கு வழிகாட்டினார். ஆனால் அந்த கோரிக்கையை மறுதலித்த ஒமார், யூத ஆலய இடிபாடுகளை மூடியிருந்த குப்பைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். (கிறிஸ்தவ ஆட்சிக் காலத்தில் அந்த இடம் பாரிய திறந்தவெளி குப்பைத் தொட்டியாக பயன்படுத்தப்பட்டது.) யூத ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒமார் கட்டிய சிறிய மரத்தாலான மசூதி புனரமைக்கப்பட்டு, இன்று “அல் அக்சா மசூதி” என்று அழைக்கப்படுகின்றது.(“The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In” by Hugh Kennedy) உயரமான குன்றின் மேலே கட்டப்பட்ட குவிமாடம் ஒன்றை பலர் மசூதி என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். அது மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசியான ஆபிரஹாம், தனது பிள்ளையை பலி கொடுக்க எத்தனித்த இடம் என்று நம்பப் படுகின்றது. ஒமாருக்கு பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தை ஆண்ட மாலிக்கின் காலத்தில் அந்த அழகான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இன்றும் ஜெருசலேம் நகரின் அடையாளமாக விளங்கும் தங்க நிற குவிமாடத்தைக் கொண்ட கட்டிடம் ஒரு மசூதியல்ல என்ற உண்மை பலருக்கு தெரியாது. (http://nl.wikipedia.org/wiki/Rotskoepel)
சியோனிஸ்ட் பரப்புரையாளர்கள் : உலகெங்கும் யூதர்கள் அகதிகளாக அலைந்து திரிந்தார்கள். அவர்களது சொந்த நாட்டில் மோசமாக நடத்தப்பட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமியப் படையெடுப்பு.” என்று கொண்டு வந்து நிறுவ முயற்சிக்கின்றனர். கி.மு. 70 களிலேயே யூதர்களின் ஐரோப்பா நோக்கிய புலப்பெயர்வு நடந்தன என்ற எடுகோளுடன் முரண்படுகின்றது அந்தக் கருத்து. ரோமர்களில் காலத்திலேயே யூதர்களின் தேசம் தனது சுதந்திரத்தை இழந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வல்லரசால் “இஸ்லாமிய தாலிபான்” அரசு விரட்டப்பட்டது போல, கி.மு. 70 ல் ரோமர்கள் “யூத தாலிபான்” அரசை அகற்றினார்கள். (அன்றைக்கும் கடும்போக்கு யூத மத அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை, ரோமர்கள் படையெடுப்புக்கு காரணமாக அறிவித்தார்கள்.) ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை முதல் எதிரியாக கருதிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அமெரிக்கர்களை வலிந்து அழைத்திருந்தனர். சோவியத் படைகள் வெளியேறிய சில வருடங்களில், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. கிட்டத்தட்ட அதே போன்ற வரலாற்றைக் கொண்டவர்கள் தான் யூதர்களும். வரலாறு திரும்புகிறது என்று அடிக்கடி சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
யூத மத அடிப்படைவாத அரசு, கிரேக்கர்களுடன் போரிட்டு விடுதலை அடைந்திருந்தது. அன்று அவர்களைப் பொறுத்த வரை, சிரியாவை தளமாக கொண்டு ஆதிக்கம் செலுத்திய கிரேக்க சாம்ராஜ்யமே முதல் எதிரியாக தெரிந்தது. யூத அரசு தனது இறைமையை பாதுகாப்பதற்காக, எங்கோ இருந்த ரோம சாம்ராஜ்யத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிரகாரம், யூத அரசுக்கு ரோமாபுரி பாதுகாப்பு வழங்குமென்றும், ஒன்றின் எதிரி மற்றொன்றாலும் எதிரியாக கருதப்படும் எனவும், யுத்தத்தில் இரு தரப்பும் ஒரே பக்கத்தில் நின்று போரிடுவர் என்றும்,” உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. (பார்க்க: 1 மாக்காபீ 8:23-28) ரோமர்களை நண்பர்களாக கருதி செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் யூத அரசின் பலத்தை அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தில் சைமன் (கி.மு 140 – 4) என்ற தலைவர், மதகுருமார் பேரவையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். சைமன் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஆன்மீக தலைவரும் கூட. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதகுருமாரின் பேரவையில் முல்லா ஒமார் தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சம்பவம் அது.
இன்று இஸ்ரேலை சுற்றி அரபு நாடுகள் இருப்பதைப் போல, சுதந்திர யூத தேசத்தை சூழ இருந்தவை அனைத்தும் கிரேக்க நாடுகள். கிரேக்கம் அரசு மொழியாக இருந்தது, ஆனால் வேறு மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்ந்தனர். அன்று பொதுவாக கிரேக்க மொழி பேசும் நாடுகளில் யூதர்கள் மீதான வெறுப்புக் (Anti Semitism) காணப்பட்டது. அது பிற்காலத்தில் கிரேக்கர்களால் கிறிஸ்தவ மதத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டது. கிரேக்க சரித்திர ஆசிரியர் Diodorus Siculus பதிவு செய்த குறிப்புகளில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
யூதர்கள் பிற இனக் குழுக்களை பகைவர்களாக கருதுகின்றனர். யூதர்கள் எகிப்தில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். எகிப்தியர்கள் தொழு நோயாளிகளையும், தேகத்தில் வெள்ளைப்புள்ளி கொண்டவர்களையும் சபிக்கப் பட்டவர்களாக கருதி எல்லைக்கு வெளியே விரட்டி விட்டார்கள். அகதிகளாக வெளியேறியவர்கள் ஜெருசலேமை கைப்பற்றிய பின்னர் தான் தம்மை யூதர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் மனித குலத்திற்கு எதிராக வெறுப்புக் கொண்ட காரணத்தால், வேடிக்கையான சட்டங்களை கொண்டிருந்தனர். அவர்கள் அந்நியர்களுடன் தமது ரொட்டியை பகிர்ந்துண்ண மாட்டார்கள். (Diodorus Siculus 34-35,1)
மத்திய கிழக்கில் அலெக்சாண்டர் நிறுவிய கிரேக்க சாம்ராஜ்யம் அழிந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் மேற்கே தோன்றிய ரோம சாம்ராஜ்யம் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மத்திய கிழக்கில் கால் பதிக்க இடம் தேடிக் கொண்டிருந்த ரோமர்கள், யூதர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒரு வல்லரசை விரட்டிய யூத தேசம், இன்னொரு வல்லரசுக்கு அடிமையாகும் என்று அன்று யாரும் நினைக்கவில்லை. சுமார் நூறாண்டு கால சுதந்திரம், பொம்பியுஸ் என்ற ரோம தளபதியினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சிறு தேசங்களின் இறையாண்மை சாம்ராஜ்யவாதிகளின் நலன்களுக்கு குறுக்கே நிற்குமாயின், அந்த தேசங்கள் அழிக்கப்படும். இன்று தாலிபான்களை ஆப்கானிஸ்தானை அமெரிக்க ஏகாதிபத்தியம் இலகுவாக தூக்கி எறிந்தது போல, அன்று ரோம ஏகாதிபத்தியம் யூத தேசத்தை ஆக்கிரமித்தது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மத நம்பிக்கை போதும் என்று தாலிபான்கள் கருதியது போல, அன்றைய யூதர்களும் நம்பினார்கள்.
ரோம ஆக்கிரமிப்புக்கு எதிராக கெரில்லாப்போர் நடத்திய யூதர்களின் சீலோட் (Zealot) இயக்கம், நவீன பயங்கரவாத அமைப்புகளுக்கு முன்னோடியாக அமைந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். (Early History of Terrorism ) அன்றைய சீலோட் இயக்கத்திற்கும், நமது கால தாலிபானுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு குழுக்களும் கடும்போக்கு மத அடிப்படைவாதிகளை கொண்டிருந்தன. தாமே உண்மையான மத நம்பிக்கையாளர்கள், இறைவன் தமது பக்கமே நிற்கிறார் என நம்பினார்கள். பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் ஒரு பெரிய வல்லரசு இராணுவத்தை வெளியேற்றலாம் என கருதினார்கள். அன்று ரோமர்களால் இறுதியில் சீலோட் கிளர்ச்சி அடக்கப்பட்ட பொழுது, அமைப்பில் இருந்த அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். பிற்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் மத்தியில் சீலோட் அனுதாபிகள் இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. சீலோட் சைமன் என்று பெயரிடப்பட்ட ஒருவரை விவிலிய நூல் குறிப்பிடுகின்றது. ஜூதாஸ் கூட சீலோட் பாணியில் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும், இயேசு அதற்கு மறுத்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு. ரோமர்களும் மிதவாத இயேசுவை ஹீரோவாக்கி, தீவிரவாத ஜூதாசை துரோகியாக்கி விட்டிருக்க சாத்தியமுண்டு. ஏகாதிபத்திய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி தான் இருக்கின்றது.
யூத தேசம் மீதான ரோம ஆக்கிரமிப்புப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஜோசெபுஸ் என்பவர் எழுதிய குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. போரைப் பற்றிய சரித்திரத்தை அவர் மட்டுமே எழுதி வைத்துள்ளார். (The Jewish War )
அவரின் எழுத்துகளை ஆராய்வதற்கு முன்னர், பின்வரும் தகவல்கள் முக்கியமானவை. முதலாவதாக அன்று இருந்த யூத தேசம் இஸ்ரேல் என்று அழைக்கப்படவில்லை. அதன் பெயர் யூதேயா. இரண்டாவதாக ஜோசெபுஸ் ரோமர்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிப்படையின் தளபதியாக இருந்தவர். போரின் நடுவில் ரோமர்களிடம் சரணடைந்து ரோம பிரஜையாக மாறியவர். அதனால் அன்றைய யூதர்கள் ஜோசெபுஸ் ஒரு துரோகி என்றழைத்தனர். மூன்றாவதாக, ஜோசெபுஸ் தனது நூலில் இயேசு கிறிஸ்துவை பற்றி குறிப்பிடுகின்றார். அதைத்தான் கிறிஸ்தவர்கள் இயேசு என்பவர் வாழ்ந்ததற்கான சரித்திர ஆதாரமாக காட்டுகின்றனர். ஜோசெபுஸ் போன்றவர்கள் எழுதி விட்டதாலேயே, அவற்றை ஆதாரமாக கொள்ள முடியாது. ஏனெனில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அனைவரும் கிரேக்கர்களுடன், ரோமர்களுடன் கூட்டுச் சேர்ந்த யூதர்கள். அதாவது அன்றைய யூதர்கள் கிறிஸ்தவத்தை “துரோகிகளின் மதம்” என அழைத்தனர்.
ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை நிர்மூலமாக்கிய ரோமர்கள், ஜெருசலேமை ரோம நகரமாக மாற்றினார்கள். அங்கே யூதர்கள் குடியேறக் கூடாது என தடையுத்தரவு போட்டனர். அது மட்டுமல்ல யூத வரி (Fiscus Judaicus) என்றொரு அநியாய வரி அறவிடப்பட்டது. ஆக்கிரமிப்புக்கு முன்னர் யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்திற்கு வரி செலுத்திக் கொண்டிருந்தனர். தற்போது சக்கரவர்த்தியின் உத்தரவுக்கிணங்க, ரோமாபுரியில் கட்டப்படும் ஜூபிட்டர் ஆலயத்திற்கு யூதர்கள் வரி கட்டினார்கள். இது சம்பந்தமாக ரோம வரித் திணைக்களத்திற்கு நிறைய முறைப்பாடுகள் வந்தன. சிலர் தாம் யூதர்கள் இல்லை என்று மறைத்தனர். யூதர்களை ஒத்த கலாச்சாரத்தை கொண்டிருந்த பிற மதத்தவரும் பாதிக்கப்பட்டனர். “ஒரு தடவை 90 வயது வயோதிபர் ஒருவர் (யூத மத சடங்கின் படி) சுன்னத்து செய்திருக்கிறாரா என, அதிகாரிகளின் முன்னிலையில் ஆடை அவிழ்த்து ஆராயப்பட்டதாக…” நேரில் கண்ட சாட்சியான Suetonius என்பவர் எழுதியுள்ளார்.
ஜெருசலேம் ஆலயத்தை நிர்மூலமாக்கிய காலகட்டத்தின் பின்னர் தான் யூதர்கள் உலகம் முழுக்க அகதிகளாக அலைந்தனர் என்று நினைப்பது தவறு. ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், அலெக்சாண்டிரியா (எகிப்து), சிரேனே (லிபியா) ஆகிய நகரங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அன்று அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை, ஜெருசலேம் யூதர்களை விட பல மடங்கு அதிகம். அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் இரண்டாவது பெரிய நகரத்தின் மொத்த அரை மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் யூதர்கள். அலெக்சாண்டரியாவில் வாழ்ந்த யூதர்களும் ஆரம்பத்தில் ரோமர்கள் பக்கம் நின்றனர். இதனால் மனதில் வன்மம் கொண்ட கிரேக்கர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இனக்கலவரத்தில் இறங்கினார்கள். சிறு சச்சரவு கூட கலவரம் வெடிக்க காரணமாக இருந்தது. எண்ணிக்கையில் அதிகம் என்பதால், சில நேரம் யூதர்களின் கை ஓங்கியிருந்தது. ஆனால் ரோம ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், கிரேக்க சமூகத்தின் சார்பாக இருந்தன. ரோமர்களின் கடவுள் சிலைகள் அமைப்பதற்கு யூதர்கள் எதிர்த்ததும் அதற்கு காரணம்.
கலவரங்கள் காரணமாக அலெக்சாண்ட்ரியா யூதர்கள், தலைநகரான ரோமாபுரிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அதே நேரம் அங்கே ஏற்கனவே குடியேறிய யூத சமூகம் ஒன்றும் இருந்தது. ரோமர்களுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட மக்காபீக்களின் காலத்தில், பல ஜெருசலேம் யூதர்கள் ரோமாபுரியில் குடியேறினர். கி.மு. 63 ல், யூத தேசத்தை வெற்றி கொண்ட ரோம தளபதி பொம்பியுஸ், போர்க் கைதிகளை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்தான். இவர்களும் ரோமாபுரியில் வாழ்ந்த யூதர்களுடன் கலந்து விட்டனர். ரோம சாம்ராஜ்யத்தில் மத சுதந்திரம் காணப்பட்டது. யூதர்கள் அதைப் பயன்படுத்தி, ரோமர்களையும் தமது மதத்தில் மாற்றிக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ மத ஆதிக்கம் வந்த பின்னர் தான் மத மாற்றம் சட்டப்படி தடை செய்யப்பட்டது.
(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
2.இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா

[ திருமணத்தின் நோக்கம், முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம், (கருக்)கொலையும் - சட்டமும் ]

நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி[ திருமணத்தின் நோக்கம், முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம், (கருக்)கொலையும் - சட்டமும் ]
திருமணத்தின் நோக்கம்
திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.கடலில் படகுப்பயணம் செய்பவர்கள் படகில் ஓட்டை ஏற்பட்டால் தண்ணீர் உள்ளே வராதிருப்பதற்கு அதை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சிகள் தோல்வியடைந்தால் வேறு படகில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியரிடையே சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. சிந்திக்கத் திறனில்லாமை, ஆத்மீகப் பயிற்சியில்லாமை போன்ற காரணங்களினால் விவாகரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
தலாக் என்னும் திருமண முறிவுக்கு ஆல்குர் ஆனில் அத்தியாயம் 2 ; 4 58 ; 65 ஆகியவைகளில் அங்கீகாரமும் விளக்கங்களும் அருளப்பட்டிருக்கின்றன. அத்தியாயம் 4 வசனம் 35,128 ஆகிய இடங்களிலும் ''அத்தலாகு'' என்ற சொல் இரண்டு இடங்களிலும் ''அல்முதல்லகாத்'' என்ற சொல் இரண்டு இடங்களிலும் அல்குர்ஆனில் வருகின்றது. பெண் சுதந்திரம், ஆண் பெண் சமம் என்று கூறிக் கொண்டே பெண்களை அடிமைகளாக சித்தரிக்கும் ''கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'' என்ற இக்கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் நியாயமான காரணங்கள் இருந்தால் ஷரீஅத் சட்டத்தின்படி விவாகரத்து பெறலாம் என்று அனுமதிக்கிறது. தகுந்த காரணமின்றி விவாகரத்து கேட்கும் ஒரு பெண் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பெண்களுடைய உரிமை சம்பந்தமாக எழும் வழக்குகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெண் நீதிபதி இருக்க வேண்டும் என்று இமாம் அபூஹனீபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.ஒரு ஆணைப்போல ஒரு பெண் விவாகரத்து சொல்வதற்கு உரிமைகள் குறைவாக தரப்பட்டிருப்பதின் காரணம் பெண்கள் பொதுவாக உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவு எடுப்பவர்கள், பிறகு அதற்காக வருந்துபவர்கள். எனினும் மற்ற மதங்களில் உள்ளது போன்ற விவாகரத்து காரணங்கள் இஸ்லாத்தில் மிக மிகக்குறைவு என்பதை மனதிற்கொள்ள வேண்டும். 1920ன் மிகப்பெரிய மார்க்க அறிஞர்மெளலானா அஷ்ரப் அலி தானவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் பெண்கள் அறிவாற்றலில் குறைவாக இருப்பதால் தன்னிச்சையாக அவர்கள் விவாகரத்து கேட்பதை அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.
அண்மையில் எகிப்து நாட்டின் ஜனாதிபதி பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமையைக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வர முயற்சித்த போது, பெண்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், அவசரமான, முன்யோசனையற்ற முடிவு எடுப்பவர்கள் என்று கூறி உலமாக்கள் கடுமையாக எதிர்த்ததால் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் தன் முயற்சியைக் கைவிட்டார்.
உணர்ச்சி வசப்பட்டு விபரீத முடிவுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் கருத்து மோதல்களும் சச்சரவுகளும் எல்லையத் தாண்டி ஏற்படும் போது நடுவராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் இருவரும் பிரிந்து செல்ல ஒப்புதல் தந்து செயல்படுத்துங்கள் என்று இறைவன் தன் திருமறையில் அறிவுரை தருகிறான். திருமறையின் அறிவுரையைத் தம்பதியார் ஏற்று செயல்படாவிட்டால் இஸ்லாமிய வட்டத்திற்கு அப்பால் தூக்கி எறியப்படும் நிலைமை ஏற்படும்.
முத்தலாக் செய்வதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலும் அது வெறுக்கத்தக்கது. ஒவ்வொரு மாதவிடாய் காலம் முடிந்த பின்னும் ஒருமுறை விவாகரத்துச் சொல்லி ஒற்றுமை/மறுமலர்ச்சி அடைவதற்கு சந்தர்ப்பம் தர வேண்டும். மூன்றாவது முறையும் வேற்றுமை நீடித்தால்தான் இறுதியாக ஒரு முறை சொல்லி விவாகரத்துச் செய்தல் வேண்டும். அதுதான் அழகிய தலாக் என்று சொல்லப்படுகிறது.
என்றும் நம் நினைவில் வாழ்கிற காயிதே மில்லத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்: ''தன்மானம் உள்ள முஸ்லிம் இளைஞன் தன் உழைப்பில் நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் இறைவன் அளிப்பது மட்டும் போதும் என்ற உணர்வுடன் ஏழை வீட்டில் பெண் எடுப்பான். அவன் கைக்கூலிக்கோ மற்ற எந்த அற்ப பொருளுக்கோ ஆசைப்படமாட்டான். நமது மார்க்கச் சட்டம் தெரியாத இளைஞன் பணத்திற்கும் கைக்கூலிக்கும் ஆசைப்படுவான். அவனை நமது பெரியோர்கள் திருத்த வேண்டும். இல்லையயன்றால் நமது சந்ததியினருக்கு ஆபத்து வந்து சேரும்.''கைக்கூலிக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் கைக்கூலி பெறுவதற்காகவே, தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் கயவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். படித்த இளைஞர்களும் பணத்திற்காக விலைப்போகும் கொடுமை இந்த நாட்டில் அதிகமாகி வருவது வேதனைக்குரியது. கணவன் மனைவி இருவரும் ஒப்புக் கொண்டு விவாகரத்து செய்வது ''முபர்ராத்'' விவாகரத்து என்றும் மனைவி விரும்பி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றால் அதற்கு ''குலா'' என்றும் கூறுவார்கள்.முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriage Act 1939) 1939ம் ஆண்டு முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriage Act 1939) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களைக் காட்டி முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறலாம்.
1. நான்கு ஆண்டுகளுக்கோ அதற்கு மேற்பட்டோ கணவன் போன இடம் தெரியவில்லையயன்றாலும்
2. இரண்டு ஆண்டுகள் மனைவிக்கு குடும்பப் பராமரிப்பு செலவு கொடுக்க கணவன் தவறினாலும்
3. ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலோ மேல் முறையீடு செல்லும் உரிமையிழந்து கணவனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டாலும்
4. தகுந்த காரணம் இல்லாமல் மூன்று ஆண்டுகள் வரை கணவன் தன் கடமைகளை செய்யத் தவறினாலும்
5. கணவன் ஆண்மையற்ற தன்மை உடையவன் என்று நிரூபிக்கப்பட்டாலும்
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொழுநோய், பெண்சீக்கு நோய் ஆகியவை கணவனுக்கு இருந்தாலும்
7. பெண்ணுக்கு பருவ வயது எய்துவதற்கு முன்பெற்றோராலோ, காப்பாளராலோ திருமணம் செய்து வைக்கப்பட்டாலும் இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தவறுகளை கணவன் செய்தாலும் ஒரு பெண் விவாகரத்துப் பெறலாம்.
முஸ்லிம் சட்டப்படி கணவன் மதம் மாறினால் விவாகரத்து ஏற்பட்டுவிடுவது போல மனைவி இஸ்லாத்தை துறந்தாலும் திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் U.M.அபுல் கலாம் முஸ்லிம் சட்டம் என்ற நூலின் 203ம் பக்கத்தில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வழக்கின் தீர்ப்பைப் பற்றி குறிப்பிடுகிறார்.
பிற மதத் தம்பதிகளில் ஒருவர் முஸ்லிமாக மாறிவந்த மற்றவரை முஸ்லிமாக மாறும்படி அழைக்கவும் அதை அவர் மறுக்கவும் செய்த காரணத்தை மட்டிலும் வைத்து வேறு மத சட்டஅடிப்படையில் நடந்த திருமணத்தை முஸ்லிம் சட்ட விதிப்படி திருமண முறிவு செய்து கொள்ள உரிமைக் கோருவது இந்திய நாட்டுச் சட்டத்திற்கு ஒத்துவராது என்று கூறி நூர்ஜஹான் பேகம் வழக்கில் (Noorjahan Vs Enggene Tishence 1941 45 CWN 104) கூறப்பட்டுள்ள முடிçப் பின்பற்றி ரொபஸ்ஸாகான் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.சரளா முத்கல் வழக்கில் (Sarala Mudgal Vs Union of India and others 1995 (3) SCC 635 - 1995 AIR SC 1531) இந்து கணவன் முஸ்லிம் மதத்திற்கு மாறிவந்தால் இந்து முறைப்படி நடந்த திருமணம் முறிந்து விடாது என்றும் இந்து திருமணச் சட்டத்தின்படி நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை அச்சட்ட முறைப்படியே முறிக்க வேண்டும் என்றும், மதம் மாறி வந்து முஸ்லிம் முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் முந்தி திருமணம் ரத்தாகி விட்டது என்றும் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்கு பிரிவு 494 இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மூன்று மாத காலமோ அல்லது மூன்று மாதவிடாய் காலமோ முடியும் வரை கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம். இந்த காலம் முடிந்தவுடன் அவள் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்று விடுகிறாள். அதனால் தான் விவாகரத்திற்கு ஆளான முந்திய கணவனிடமிருந்து அவள் ஜீவனாம்சம் பெறுவதை இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்க வில்லை. என்றாலும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு தகப்பனின் கடமை. வயது அடைவது வரையில் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும்.1973ம் ஆண்டு குற்ற விசாரணை முறை சட்டம் மத்திய சட்டம் 2/1974ன் படி இச்சட்டத்தின் கீழ் 125 முதல் 128 வரை உள்ள பிரிவுகள் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு ஜீவனாம்சத்திற்கு வழிவகை செய்கின்றன. உடனடியாகவும், விரைவாகவும் நிவாரணம் கிடைக்க வழி செய்கிறது. இவ்விதித் துறைகள் சட்ட சிக்கல்களில் மூழ்காமல் குறுக்கு விசாரணை முறையில் (Summary Trails) முடிவுகட்ட வழி செய்கிறது. சிவில் வழக்கிலுள்ள நுட்பமும், திட்டமும், எதிர்ப்பும், மறுப்பும், விசாரணைகளும் குறுக்கு விசாரணைகளும் இங்கு உன்னிப்பாக பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. சிவில் வழக்கு மூலம் முடிவு கட்டப்பட்ட பின்னர் அத்தீர்ப்பைக் காண்பித்து இப்பிரிவின் கீழ் நிவாரணம் கேட்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வழக்கில் (Air 1968 Madras 79) தீர்ப்பளித்துள்ளது.
தேவை : முற்றுப்புள்ளி!
சமுதாயத்தின் பாதுகாப்புக்காக இயற்றப்படுபவையே சட்டங்கள், பல்வேறு சமுதாயங்கள் இணைந்து வாழ்வதற்கும் கொடுமைகள் களையப்படுவதற்கும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் நீதியை நிலை நிறுத்துவதற்கும், பன்னாட்டு உறவுகளை இணைப்பதற்கும் சட்டத்தின் துணை அவசியமாகிறது.
ஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை, அவருடைய சம்மதமின்றி நாணயமற்ற முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதைத் திருட்டு என்று கூறுகிறோம்.
குற்றவியல் சட்டங்களில், திருட்டுக் குற்றம் மிக மோசமானது. இந்தியக் குற்றவியல் சட்டத்தில் 378
-ம் பிரிவு அது பற்றிய விளக்கத்தைத் தருகிறது. உதாரணமாக ஒருவனுக்கு சொந்தமான மரத்தை அவனுடைய அனுமதியில்லாமல் வெட்டி தன்னுடைய அனுபவத்துக்காக அதை எடுத்துச் சென்றால் அது திருட்டு எனப்படும். மற்றொருவன் வீட்டிற்குச் செல்கின்ற ஒருவன் அவனது மேசையில் ஒரு மோதிரத்தைப் பார்க்கிறான். வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல், அவன் அந்த மோதிரத்தை எடுத்துச் சென்றால் அது திருட்டு தான்.
அரசுக்கு சொந்தமான மின்சாரத்தை அரசு அனுமதியில்லாமல் அந்த மின்சாரத்தை தன் வீட்டுக்கு உபயோகப்படுத்தினால் அதுவும் திருட்டு தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
குற்றவியல் சட்டம் 379 ம் பிரிவில் திருட்டுக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவாளி, திருடினான் என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று வருடங்கள் வரை தண்டனையோ, அல்லது அபராதமோ, அல்லது சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்தோ தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.
D.K.K.முதலியார் என்பவர் மீது தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்த வழக்கில் I.P.C 378ம் பிரிவில் கூறப்பட்டிருப்பது போல் மின்சாரம் என்பது அசை பொருள் என்று இல்லா விட்டாலும் 1910ம் ஆண்டு மின்சார சட்டம், பிரிவு எண்.39. பிரிவு எண்.50, ஆகியவற்றை இணைத்து, I.P.C. 379ம் பிரிவின்படி அரசு அனுமதியில்லாமல் பிரதிவாதி, மின்சாரத்தை தன் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதால், திருடியதற்கான தண்டனை பெற்றார். இதேபோல், நகராட்சி வினியோகிக்கும் தண்ணீரை அனுமதியில்லாமல் எடுத்து உபயோகித்தாலும் திருட்டு குற்றம் செய்ததாகி விடும்.
பந்தே அலிஷேக் என்பவர் மீது கல்கத்தா நீதிமன்றத்தில் 1939ல்
(Bande Ali Shaikh 1939-2 CAL 419) தரப்பட்ட தீர்ப்பில் சொந்த நிலத்திலேயே ஒருவர் திருடினார் என்பதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் (குற்றவாளி) மற்றவருக்குக் கொடுக்க வேண்டிய கடன் பாக்கிக்காக அவருடைய நிலத்தை வழக்கு மன்றம், அவர் அறுவடை செய்யக் கூடாது என்று ஆணையிட்டு, வழக்குமன்றத்தின் அனுபவ பாத்யதையில், குற்ற விசாரணைச் சட்டம் - 145ன்படி தன் வசத்தில் வைத்திருந்தது. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு மன்றத்தின் அனுமதியில்லாமல் அறுவடை செய்து தானியங்களை எடுத்துச் சென்று விட்டார். அதனால் அவர் மீது திருடினார் என்பதற்கான தண்டனை வழங்கப்பட்டது.Obayya (1898) 22 MAD 151 என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இது போன்ற ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது அனுமதியில்லாமல், அறுவடை செய்து தானியங்களை எடுத்துச்சென்று திருட்டு ஆகாது என்றும், குற்றவியல் சட்டம், பிரிவு 403, 424ன் படி இது மோசடியும், ஏமாற்றமும் ஆகும் என்றும், அதற்கு தண்டனை இரண்டு வருட சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருட்டு சம்பந்தமாக இங்கிலாந்து நாட்டு குற்றவியல் சட்டத்திற்கும், இந்திய நாட்டு குற்றவியல் சட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. இங்கிலாந்து சட்டத்தில் அனுமதியின்றி நிரந்தரமாக ஒரு பொருளை எடுத்துச் சென்றால்தான் திருட்டு என்று கூறப்படுகிறது. ஆனால் இந்திய குற்றவியல் சட்டத்தில், தற்காலிகமாக எடுத்துச் சென்றாலும் அது திருட்டு ஆகிவிடும்.
இஸ்லாம் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் என்ற தண்டனை வழங்குகிறது. அதேசமயம், வறுமை என்பது இறை மறுப்பு என்ற நிலைக்கு இழுத்துச் சென்று விடும் என்பதற்காக ஒருவன் தனது பசிக்காகவோ, அல்லது அவசிய, அவசர தவிர்க்க முடியாத தேவைக்கோ திருடியிருந்தால் தண்டனை வழங்குவதில் கருணை காட்டுகிறது.
இஸ்லாமிய தண்டனை முறையின் குறிக்கோள் சீர்திருத்தமேயாகும். அதைத்தான் திருமறையின் விரிவுரையில் அல்லாமா யூசுஃப் அலி அவர்கள் "The Chief object of Islamic punishment in the first instance is reformation. Elimination from society of the offender is to be used as a last resort" என்று கூறுகிறார்கள்.மனிதனின் சிந்தனையைத் தூண்டி உள்ளத்தைப் பண்படுத்தி, ஒழுக்க நெறிகளை வளர்த்து, மனிதாபிமானம் சிறக்கவும், அனைத்து சமுதாயத்தினரையும் வளப்படுத்தவும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் உதவுகின்றன.
கையை வெட்டுதல் மிகக் கொடூரமானதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை சிந்திக்கும் காலை திருட்டு அதைவிடக் கொடூரமானது என நம்மை உறுதிப்படுத்தும்.
சமீபத்தில் வேலூரில்
''நாகா ஜூவல்லரி'' என்ற நகைக் கடையில் புகுந்து 3 பேரைக் கொன்று விட்டு நகைகளை திருடி எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் தமக்கு இடையூறாக இருந்தவர்களையும் கொன்று விட்ட சம்பவத்தை நாம் அறிவோம். அதே ஊரில் ஒரு வீட்டில் உரிமையாளரைக் கொன்று விட்டுத் திருடிய சம்பவமும் தெரிந்ததே. இவைகள் திருடுவதற்காக செய்யப்பட்ட கொலைகள். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டுமானால் இஸ்லாமிய குற்றவியல் தண்டனையே தீர்வாகும்.(கருக்)கொலையும் - சட்டமும்பெண் பிறந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்காக கருவிலேயே கொன்று விடும் கொடுமை நாட்டில் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கருவிலேயே கொலை செய்யும் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
பெண்கள் படும் துன்பத்தை தொலைக்காட்சியில் காணப்படும் தொடர் நாடகங்களில் மிகைப்படுத்தி காண்பித்து வருகிறார்கள். இதனால் பெண் குழந்தையே பெறக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து விடுகிறார்கள், என்று பிரபல தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஒரு அறிக்கையில் கூறுகிறார்.
1961-ல் ஆண்கள் ஆயிரம் என்றால் பெண்கள் 995 பேர் இருந்தார்கள். 2000ல் 1000 ஆண்டுகளுக்கு 939 பெண்கள் இருந்தார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1000 ஆண்களுக்கு, பெண்களின் எண்ணிக்கை 900க்குக் கீழே சென்று விட்டது. வறுமையின் காரணமாகவும், நெசவாளர்களும், விவசாயிகளும், ஏழைகளும், குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்திய தண்டனைச் சட்டம் 312 : ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அன்றி, வேறு எவ்விதத் காரணத்திற்காகவும், கருவைச் சிதைத்தல் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.கருவுரும் நிலையில் கருச்சிதைவு செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
ஒரு பெண் தனக்குத் தானே அத்தகைய கருச்சிதைவைச் செய்து கொள்வதும் இந்தப் பிரிவின் கீழ்க் குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 313-படி கர்ப்பிணியின் சம்மதத்தைப் பெறாமல் கருக்கலைப்புச் செய்தால் செய்தவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டப்படி (314) கருவைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் போது அந்தப் பெண்ணுக்கு மரணம் சம்பவித்தால், அதற்கு காரணமானவருக்குப் பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும், தண்டனையாக விதிக்கப்படும்.இதே செயலை, அந்தப் பெண்ணுடைய சம்மதமின்றிச் செய்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது மேலே குறிப்பிட்டுள்ளபடி தண்டனை வழங்கப்படும். குற்றம் புரிந்தவர், தம்முடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் அதற்காகக் குற்றப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு எண் 315, 316, 317, 318 வரையில் இந்தக் கருக்கொலை தொடர்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது. மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் குற்றங்களைப் பற்றி விளக்கம் அளிக்கும் இந்திய தண்டனை சட்டத்தில் முக்கியமான பிரிவுகள் 299ம், 300ம் ஆகும்.
பிரிவு எண் 299 என்பது மரணம் விளைவிக்கும் குற்றம் என்றும், பிரிவு எண் 300 கொலைக்குற்றம் என்றும் விவரித்துள்ளது. ஒருவனை கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு துப்பாக்கியால் எட்டோ, ஆயுத்தத்தால் வெட்டியோ, அல்லது ஏதாவது ஒரு பொருளால் அடித்தோ உயிரைப் போக்கினால் தான் பிரிவு எண் 300 என்ற கொலைக்குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.
ஒருவனை விரோதிகள் சிலர் சேர்ந்து கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு விரட்டிச் செல்லும் போது, விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் வழியில் இருந்த ஒரு கிணற்றில் குதித்தான். அதனால் அவனுக்கு மரணம் ஏற்பட்டது.
Nirbhai Singh 1972 CrLJ 1474 (MP) என்ற வழக்கில் தானாகக் கிணற்றில் விழுந்ததால் இது கொலைக்குற்றம் ஆகாது என்று குற்றவாளிகள் கீழ்க்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது குற்றவாளிகளான ஜோகிந்தர் சிங்கும், பல பிந்தர் சிங்கும் அல்லது 20 அடி தூரத்துக்குள்ளாக இறந்தவனை விரட்டிக் கொன்றுள்ளார்கள். கிணறு மட்டும் அங்கு இல்லையயனில் முடிவு வேறு விதமாக இருந்து இருக்கும் என்று குறிப்பிட்டது. எந்தெந்த செயல்களின் காரணமாக மரணம் ஏற்படுத்தியும் கொலைக்குற்றமாக ஏற்கப்படாது என்பதை கவனிப்போம்.
ஒருவன் மற்றவனின் தாயை தரக்குறைவாகப் பேசியோ, எதைப் பேசினால் அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆவேசமடைந்து, நிதானம் இழந்து கோபத்தைத் தூண்டியவனை தாக்கியதன் காரணமாக மரணம் விளைவித்தால் அது கொலைக் குற்றம் ஆகாது.
ஆனால் ஒருவன் கோபத்தைத் தூண்டினான் என்பதற்காக அவன் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவரைக் கொன்றால் அது கொலைக்குற்றம் ஆகிவிடும்.
கோபத்தின் காரணமாக துப்பாக்கியால் சுடும் போது குறிதவறி அருகில் இருந்த ஒருவன் மீது குண்டுப்பட்டு அவன் இறந்தால் அது கொலைக்குற்றம் (பிரிவு எண் 300) ஆகாது என்றாலும் மரணம் விளைவிக்கும் குற்றத்திற்கு (பிரிவு எண் 299) ஆளாக வேண்டும்.
கைது செய்ய வந்த அரசு அதிகாரியின் மீது கோபப்பட்டு அவரை ஒருவன் கொன்றால் அது கொலைக் குற்றமாகும்.
துன்புறுத்தப்படுகிற ஒருவர் வன்முறையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரியைத் தாக்கினால் அது கொலைக்குற்றம் ஆகாது. மரணம் விளைவிக்கும் குற்றத்தில் சேர்க்கப்படும்.
பிரிவு எண் 302-ல் கொலைக் குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒருவன் சிறை அதிகாரியையோ, சக கைதியையோ கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனை தான் விதிக்கப்படும் என்பதை பிரிவு எண் 303 விளக்குகிறது.கொலைக் குற்றவாளிகளில் பலர் சாட்சிகள் இல்லாததால் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். இன்றைய உலக சட்டம் உயிருக்கு பதில் உயிர் என்ற தண்டனை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது. கொல்லப்பட்டவனின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை கொடுப்பதற்கோ குற்றவாளியை மன்னிக்கவோ வகை செய்யவில்லை.1918 ம் ஆண்டு அறிக்கையின்படி அமெரிக்காவில் 24 நிமிடங்களுக்கு ஒரு கொலை செய்யப்படுவதாகவும், பத்து விநாடிகளுக்கு ஒரு வீடு சூறையாடப்படுவதாகவும், ஏழு விநாடிகளுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுவதாகவும், 13 விநாடிகளுக்கு ஒரு கைத்துப்பாக்கி விற்பனையாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அகண்ட இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் இந்த வன்முறைக் கலாச்சாரம் பரவுவது வேதனை அளிக்கிறது. அறப்போர் நடத்திய மகாத்மா காந்தியடிகள் இந்த நாட்டில் தான் கொல்லப்பட்டார். யாரையும் நேசிப்பதில் அவசரப்பட்டு விடுவதோ, யாரையும் விரோதிப்பதில் துரிதப்பட்டு விடவோ கூ