ஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்!


ஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24
1) இறையச்சத்தைக் கொண்டு உபதேசித்தல்: ஒரு முஸ்லிம் உம்ராவுக்கோ ஹஜ்ஜிற்கோ பயணம் மேற்கொள்ளும்போது தமது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தக்வாவைப் பற்றி வஸிய்யத் செய்ய வேண்டும். தக்வா என்றால் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுப்பதாகும். மேலும் கடன் சம்பந்தமான கொடுக்கல் – வாங்கல்களை எழுதி வைத்து அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
(2) தவ்பாவில் ஈடுபடுதல்: ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் தங்களின் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடும் வகையில் கலப்பற்ற தவ்பா செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து மீளுங்கள்! அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்! (24:31). தவ்பா என்பது, பாவங்களிலிருந்து விலகி அதை விட்டுவிடுவதும் நடந்துவிட்டதை நினைத்து வருந்துவதும் இனி அதைச் செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுப்பதுமாகும். மக்களிடம் பொருள், உடல், மானம் மரியாதை தொடர்பான ஏதேனும் அக்கிரமங்கள் ஏற்பட்டிருந்தால் பயணம் மேற்கொள்ளும் முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் அவற்றைப் பரிகாரங்கள் மூலமாகவோ, மன்னிப்பு மூலமாகவோ தீர்த்துக்கொள்ள வேண்டும்.
(3) ஹலாலான பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தல்: ஹஜ், உம்ராவில் ஆகும் செலவுகளுக்குரிய பொருளாதாரம்: ஹலாலானதுதானா? என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ‘அல்லாஹ் நல்லவன், நல்லதைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை’| என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).
(4) மனத்தூய்மை: ஹஜ், உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் திருமுகத்திற்காகவும் மறுமைக்காகவும் புனித இடங்களில் சொல்லாலும் செயலாலும் மேற்கொள்கின்ற அமல்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற வேண்டும் என்கிற கலப்பற்ற எண்ணத்துடனும் செயல்பட வேண்டும். அத்துடன் இந்த உலகாதாயத்திற்காகவோ, முகஸ்துதிக்காகவோ, புகழுக்காகவோ, பெருமைக்காகவோ இவற்றை மேற்கொள்வது என்ற நிலையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் அமல்களைப் பாழாக்கும் காரணங்களாகும். அல்லாஹ் கூறுகிறான்: ‘யார் இவ்வுலக வாழ்க்கையையோ, அதன் அலங்காரத்தையோ நாடுகின்றாரோ அவர்களுக்கு இவ்வுலகிலேயே அவற்றைக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் எந்தக் குறைவும் ஏற்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவுமில்லை. உலகில் அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன. அவர்கள் செய்துகொண்டிருந்தவை அசத்தியமாகும். (11:15,16). மேலும் நான் அனைத்துக் கூட்டாளிகளைவிட்டும் தேவையற்றவன். யாரேனும் ஓர் அமலைச் செய்யும்போது என்னுடன் வேறெவரையும் கூட்டாக்கினால் நான் அவனையும் அவனது அக்காரியத்தையும் விட்டுவிடுவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
(5) சிறந்த நண்பனைத் தேர்ந்தெடுத்தல்: ஹஜ், உம்ரா செய்பவர்கள், தங்களின் பயணத்தோழர்களாக தக்வாவுடையவர்கள், மார்க்க ஞானம் உடையவர்கள், கட்டுப்பாடுள்ளவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விவரமில்லாதவர்களையும் பாவமிழைப்பவர்களையும் தவிர்க்க வேண்டும்.
(6) ஹஜ் – உம்ராவின் சட்டங்களைக் கற்றல்: ஹஜ், உம்ராவில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி கற்றுக்கொள்வதுடன் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பயணமாகும்போது பயண துஆக்களை ஓதிக்கொள்ள வேண்டும்.
(7) திக்ர், இஸ்திக்ஃபார்களை அதிகமாக்கிக்கொள்ளல்: பயணத்தின்போது திக்ர், இஸ்திக்ஃபார், பணிவுடன்கூடிய துஆ, குர்ஆன் ஓதல், அதன் அர்த்தங்களைப் பற்றி சிந்தித்தல் ஆகியவற்றை அதிகமாக்குவதுடன் ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றவும் வேண்டும். ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறுதல், பொய், கோள், புறம், பரிகாசம் போன்றவற்றிலிருந்து நாவைப் பேணவும் வேண்டும்.

‘ஹஜ்’ கேள்வி – பதில்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
கேள்வி – பிறருக்காக ஹஜ் செய்யலாமா… உஸ்மான் – யாஹூமெயிலில்,
ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள்

அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.

இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )

பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ… என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.
மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.
தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் – நஸயி)
இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது. (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.

181 கேள்வி – நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். வருடந்தோறும் என் கம்பெனியின் மூலமாக ஒவ்வொரு நபரை ஹஜ்ஜூக்கு அனுப்புகிறார்கள்; இந்தமுறை என்னை அனுப்புவதாக உள்ளார்கள். இதுப்போல என்னிடம் வசதி இருந்தும் மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஹஜ் செய்யலாமா? இதில் ஏதும் தவறு உள்ளதா? தஞ்சை யூசுப் – ஹாட்மெயில் வழியாக. கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.

182 கேள்வி – பெண்கள் ஹஜ் செய்யும் முறை…. அப்துல் சாபுர் – யாஹூமெயில் வழியாக. பெண்களின் ஹஜ்
இறைவனின் தூதரே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) போரிட தேவையில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமை என்று கூறி அதுதான் ஹஜ்ஜூம் – உம்ராவும் என்றார்கள். (ஆய்ஷா(ரலி) அஹ்மத் – இப்னுமாஜா)
சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமை என்ற வாக்கியத்தில் சக்திப் பெற்றுள்ள பெண்களும் அடங்கத்தான் செய்வார்கள். ஆனாலும் ஒரு பெண் சக்திப் பெற்றவளாக கருதப்பட வேண்டுமானால் அவள் கூடுதலாக ஒரு சட்டத்திற்கு உட்பட வேண்டும். அது பயணத்தில் இருக்க வேண்டிய ஆண்துணை.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய பெண் மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயண தொலைவிற்கு தந்தையுடனோ – கணவனுடனோ – சகோதரனுடனோ இல்லாமல் செல்லக் கூடாது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) நஸயி – இப்னுமாஜா)
தக்க ஆண்துணை இருந்தால் தான் பெண்களுக்கு ஹஜ் கடமையாகும்.

மாதவிடாய்
நபி ஸல் அவர்களுடன் ஹஜ் செய்வதற்காக அன்னை ஆய்ஷா ரலி அவர்கள் செல்கிறார்கள் வழியில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடுகிறது. இதை அறிந்த நபி ஸல் அவர்கள் ‘ ஹஜ் உடைய எல்லா காரியங்களையும் செய், தூய்மையாகும் வரை கஃபத்துல்லாஹ்வை நெருங்காதே ‘ என்று கூறிவிட்டார்கள். இந்த கட்டளைப்படி ஆய்ஷா ரலி அவர்கள் கஃபத்துல்லாஹ்வை வலம் வரவுமில்லை, ஸபா மர்வாவில் ஓடவுமில்லை. மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடன் தன் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்துவந்து கஃபாவை வலம் வந்த செய்தி பிரபல்யமான ஹதீஸ் நூல்கள் எல்லாவற்றிலும் – குறிப்பாக புகாரியில் பல இடங்களில் – எண் 1556, 1650 – வருகின்றது.

182 a பெண்கள் உம்ரா மற்றும் ஹஜ்ஜில் முடியை சிறிது வெட்ட வேண்டுமா? சில பெண்கள் உம்ரா முடித்த உடன் முடி வெட்டுகிறார்கள்;. இவ்வாறு செய்யவேண்டுமா.? இதற்கு அனுமதி அல்லது தடை உள்ளதா.? ஜித்தாவிலிருந்து உம்மு யஹ்யா – யாஹூ மெயில் வழியாக. தலைமுடி
ஹஜ் உம்ரா செய்பவர்கள் தலையை முழுவதுமாக மழித்து விடுவது அதிக ஆர்வமூட்டப்பட்ட செயலாகும். ஆனாலும் இது ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.
பெண்கள் தங்கள் தலைமுடியை மழிப்பதை நபி(ஸல்) தடைசெய்துள்ளார்கள். (அலி(ரலி) திர்மிதி)
ஆண்களை போல் மழிப்பதற்கு தடையுள்ளதால் தங்கள் சடையிலிருந்து சிறிதளவு வெட்டி அந்த மார்க்க அடையாளத்தை பூர்த்தி செய்யலாம்.

தலையை மழிப்பது பெண்களுக்கு கிடையாது. குறைத்துக் கொள்வது அவர்களுக்கு போதும் என்பது நபிமொழி ( இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் – தாரகுத்னி)
உம்ரா மட்டும் செய்பவராக இருந்தால் முடியை குறைத்துக் கொள்வதுடன் உம்ரா நிறைவுக்கு வந்து விடும். ஹஜ்ஜையும் சேர்த்து செய்பவராக இருந்தால் மினாவில் ஜம்ரத்துல் அகபாவில் ஏழுமுறை கல்லெறிந்து பிறகு குர்பானி கொடுத்து விட்டால் அதன் பின் (ஆண்கள்) தலையை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இப்போது உடலுறவைத் தவிர இஹ்ராமின் மற்ற சட்டங்களிலிருந்து விடுபட்டு விடலாம்.

183 கேள்வி – ஹஜ் மற்றும்; உம்றா செய்வதற்கு முன்னால் களையும் அக்குள் முடிகளை இஹ்ராம் கட்டும் இடத்தில் தான் களைய வேண்டுமா அல்லது வீட்டிலிரூந்தே அதை செய்யலாமா? தயவு செய்து விளக்கவும். ஷேக் மீரான் – ஹாட்மெயில் வழியாக. இஹ்ராம் என்பது அதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடத்தை கடந்த பிறகு சில காரியங்களை செய்யக்கூடாது என்று தடுப்பதாகும். அந்தந்த எல்லையில் நின்றுதான் குளிக்கவேண்டும், முடி களைய வேண்டும், இஹ்ராம் துணி அணிய வேண்டும் என்பதல்ல சட்டம். வசதி வாய்ப்புகள் இருந்தால் தங்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே இவை அனைத்தையும் நாம் செய்துக் கொள்ளலாம். அந்த எல்லைகளை கடந்தப் பிறகு இவைகளை செய்யக் கூடாது என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த எல்லைகளை அடையுமுன் எந்த இடத்திலும் இவற்றை செய்துக் கொள்ளலாம்.

184 கேள்வி – ஜம்ஜம் நீரை நின்றுகொண்டு, பிஸ்மில்லா சொல்லாமல் தான் குடிக்க வேண்டும் ஹாஜரா(அலை) அப்படித்தான் செய்தார்கள் என்று கூறப்படுவது உண்மையா? ஜம்ஜம் நீரை குடிப்பதற்கென்று விசேஷமான முறை எதுவும் உண்டா? ரிஸ்வான் அஹ்மத் – யாஹூமெயிலில். பொதுவாக உண்ணும் போதோ குடிக்கும் போதோ தலையை மூடிக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இஸ்லாத்தில் இல்லை. தலை திறந்த நிலையில் சாப்பிடுவதில் எந்த குற்றமும் இல்லை. இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தலையை திறந்திருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும் தான்) என்பது சட்டம். எனவே அந்த நேரத்தில் தலை திறந்த நிலையில் தான் ஸம் ஸம் நீரை குடிக்க வேண்டும். பெண்கள் முகத்தையும் கைகளையும் தவிர மற்ற பாகங்களை இஹ்ராமில் மூட வேண்டி இருப்பதால் அவர்கள் தலை திறந்து ஸம் ஸம் நீரை குடிக்க முடியாது – குடிக்கக் கூடாது.
நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ – பிஸ்மில்லா சொல்லாமல் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

185 கேள்வி – ஹஜ்ஜூக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா… போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா…? ஜின்னா – யாஹூமெயில் வழியாக. நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் – தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதி. இந்த பொதுவான அடிப்படையில் – இந்த நோக்கத்திற்காக – ஹஜ்ஜை அறிவித்து உள்ளங்களை தூய்மைப்படுத்திக் கொண்டால் தவறில்லை. ஏனெனில் ஹஜ் செய்ய போகும் இடத்தில் மரணம் நிகழ்ந்து விடலாம். பிறகு இறைவன் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் மக்களிடம் பிழை பொருக்க சொல்லி விட்டு செல்லலாம். (பொதுவாக இது எல்லா பயணத்திற்கும் பொருந்தும்)
இதை விடுத்து இதர நோக்கங்களுக்காக ஹஜ் அறிவிக்கப்படுமானால் அது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும். இன்று பல ஊர்களில் இந்த நோக்கத்திற்கு மாற்றமாகத்தான் ஹஜ் விளம்பரப் படுத்தப்படுகிறது. போஸ்டர் அடித்து ஒட்டி ஏக – போக பந்தாவாக ஹஜ்ஜூக்கு கிளம்புவதை பார்க்கலாம். மக்கள் தனது ஹஜ்ஜை அறிந்து தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பரவலாக ஹஜ்ஜை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் தான் பூமாலையெல்லாம் போட்டு விழாக்கோலமாக்கப்படும். இந்த பந்தா – விழாக் கோலத்தின் பிரதி பலிப்புதான் ஹஜ் முடித்துவிட்டு வந்த பிறகு தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹஜ் செய்தவர் அல் ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வதாகும். (தனக்கு வரும் திருமண அழைப்பிதழில் ஹாஜி என்று போடாமல் வந்து விட்டால் அதற்காக சண்டைப் போடும் விளம்பர ஹாஜிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்)
இது முழுக்க – முழுக்க இஸ்லாமிய வணக்கத்திற்கும் அது எதிர்பார்க்கும் உள்ளத்தூய்மைக்கும் மாற்றமான செயலாகும்.
இறைவனுக்காக செய்யப்படும் அமல்கள் எது ஒன்றிர்க்கும் முழு உரிமையாளனும் அதற்கு கூலி கொடுப்பவனும் அவனேயாவான். இந்த அமல்கள் வேறு நோக்கங்களுக்காக செய்யப்பட்டால் அந்த அமல் இறைவனின் பார்வையில் வெறும் குப்பைக் கூளமாக்கப்பட்டு விடும்.
மக்கள் தன்னை பெரும் வணக்கசாலி என்று கூறி புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் அமல் செய்பவர்கள் நாளை நரகில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த புகழ் உலகிலேயே கிடைத்து விட்டது என்று இறைவன் கூறுவான் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள் (ஹதீஸ் சுருக்கம்) (முஸ்லிம்)

இறைவனுக்காக செய்யப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் புகழுக்கான விளம்பரம் கூடாது என்று இந்த ஒரு நபிமொழியே எச்சரித்து விடுகிறது.
தினமும் தவறாமல் தொழும் ஒருவர் தன் பெயருக்கு முன்னால் ‘முஸல்லி’ என்று (உதாரணமாக ‘முஸல்லி அப்துல் காதர்’ அதாவது தொழுகையாளி அப்துல் காதர்) என்று போட்டுக் கொள்வதில்லை.
‘நோன்பாளி அப்துல் அளீம்’ என்று யாரும் தன் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் தர்மம் செய்யும் ஒருவர் – ஜகாத் கொடுக்கும் ஒருவர் தன்னை ‘கொடை வள்ளல்’ என்று விளம்பரப்படுத்துவதும், ஹஜ் செய்தவர் தன்னை ஹாஜி என்று விளம்பரப்படுத்துவதும் (சில ஆலிம்?கள் உம்ரா செய்து விட்டு வந்து தன்னை உம்ரி என்றும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்) இறைவனுக்கு உகந்த செயல்தானா என்று விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

(நபியே) நீர் கூறும் மெய்யாக என் தொழுகையும் என் குர்பானியும் (ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அமல்) என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களில் இறைவனான அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இப்படித்தான் நான் ஏவப்பட்டுள்ளேன். (அல் குர்ஆன் 162, 163)
‘இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்’ என்ற ஏவலின் பிரகாரமே நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டினார்கள். அவர்களோ – அவர்களை சார்ந்த நபித்தோழர்களோ இந்த விளம்பரங்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் நாளை இறைவனிடம் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அதை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த மன நிலை இறைவனுக்காக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.

186 கேள்வி – ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்கிறார்களே இது கூடுமா…? ஜமால் – ஹாட் மெயில் வழியாக.

மீகாத் என்றால் எல்லை என்றுப் பொருள். ஹஜ் உம்ரா செய்யும் நோக்கோடு வெளியிலிருந்து மக்கா வருபவர்களுக்கு குறிப்பிட்ட எல்லைகளை இஸ்லாம் தீர்மானித்துள்ளது. அந்த எல்லைக்குள் நுழையும் போது இஹ்ராத்துடன் நுழைய வேண்டும். இஹ்ராம் இல்லாமல் நுழைந்தால் அவர்களால் ஹஜ்ஜோ – உம்ராவோ செய்ய முடியாது.
இவ்வாறு இஹ்ராம் பூண்டு உம்ராவை நிறைவேற்றினால் அந்த உம்ராவிற்குறிய எல்லை முடிந்துப் போய்விடும். அதாவது உம்ரா செய்வதற்காக ஒரு எல்லை வழியாக நுழையும் ஒருவர் உம்ராவை நிறைவேற்றி விட்டால் அதோடு அந்த எல்லைக்கும் உம்ராவிற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது. அவர் மீண்டும் உம்ரா செய்வதாக இருந்தால் மீண்டும் தனக்குறிய எல்லையிலிருந்து இஹ்ராத்துடன் வர வேண்டும். ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்யலாம் என்றால் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது அர்த்தமில்லாமல் போய்விடும்.
சிலர் உம்ரா செய்து விட்டு மீண்டும் இஹ்ராம் கட்டுவதற்கு மக்காவிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஆய்ஷா மஸ்ஜித் என்ற பள்ளிக்கு சென்று இஹ்ராம் கட்டி வந்து அடுத்த உம்ரா செய்வதை பார்க்கிறோம். ஆய்ஷா பள்ளி என்பது இஹ்ராத்திற்குறிய இடம் தான் என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் அது பொதுவான எல்லையல்ல. வெளியிலிருந்து வரும் போது அந்தந்த எல்லையில் இஹ்ராம் கட்டி உள்ளே நுழைபவர்களுக்கு எதிர்பாராத தடங்கள் ஏற்பட்டு உம்ரா செய்ய முடியாமல் போய் இஹ்ராத்திலிருந்து விடுபடும் சூழ்நிலை உருவானால் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட இடமாகும் அது.
இஹ்ராத்துடன் உள்ளே நுழையும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது. இந்த சந்தர்பத்தில் அவர்களால் கஃபாவை நெருங்க முடியாது. அவர்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை இஹ்ராத்திலிருந்து விடு பட வேண்டும். தூய்மை அடைந்ததும் ஆய்ஷா பள்ளி என்ற மீகாத் – எல்லைக்கு சென்று இஹ்ராம் ஆகி கொள்ளலாம். அதே போன்று இஹ்ராத்துடன் உள்ளே வருபரவர்கள் நோய்க்கு ஆட்பட்டு இஹ்ராத்திலிருந்து விடுபட்டால் அவர்களுக்கும் ஆய்ஷா பள்ளி தான் எல்லையாகும். குறிப்பாக சொல்லப் போனால் இஹ்ராத்துடன் உள்ளே நுழைபவர்கள் ஏதோ தடங்களால் உம்ரா செய்ய முடியாமல் இஹ்ராத்திலிருந்து விடுபடுகிறார்கள். இவர்கள் உம்ரா செய்ய இலகுவாக்கப்பட்ட எல்லைதான் ஆய்ஷா பள்ளி என்று அறியப்படும் ‘தன்யீம்’ என்ற இடமாகும்.
நான் இஹ்ராத்துடன் மக்கா வந்ததும் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. என்னால் கஃபாவை நெருங்க முடியவில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உன் தலையை அவிழ்த்து சீவி ஹஜ்ஜூக்கு மட்டும் இஹ்ராம் கட்டு. உம்ராவை விட்டு விடு என்றார்கள். நான் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்கு என்னை அனுப்பினார்கள். அங்கு உம்ராவிற்காக இஹ்ராத்துடன் வந்து உம்ராவை முடித்தேன். (ஆய்ஷா(ரலி) புகாரி – திர்மிதி)

நாம் மேலே விளக்கியவற்றிர்க்கெல்லாம் இந்த ஹதீஸில் ஆதாரம் கிடைத்து விடுகிறது. இது தவிர ஒரு இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்வதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
”எவ்வளவோ தொலைவிலிருந்து வருகிறோம் எங்களால் மீண்டும் அந்தந்த எல்லைக்கு சென்று இஹ்ராம் அணிவது சிரமம் அதனால் ஆய்ஷா பள்ளிக்கு சென்று வருகிறோம்” என்று சொல்லக் கூடிய மக்களைப் பார்க்கிறோம்.
ஒரு காரியத்தை செய்வதில் சிரமம் இருக்கிறது என்பதற்காக நாமாக ஒரு முடிவு எடுத்து அதன்படி செயல்பட்டு அதற்கு நியாயம் கற்பிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. சிரமத்திற்கேற்ற கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கா என்பது உம்ராவிற்கு மட்டும் கூலி கிடைக்கும் இடமல்ல. தவாபிற்கும் – தொழுகைக்கும் கூட அங்கு ஏராளமான கூலி கிடைத்து விடும். அங்கு எவ்வளவு வேண்டுமானாலும் தவாப் செய்யலாம் (தவாப் செய்வதற்கு எந்த தனி சட்டமும் இல்லை) எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம். அவரவர் எல்லைக்கு சென்று மீண்டும் இஹ்ராம் கட்டி வர முடியாதவர்கள் தவாப் – தொழுகை போன்றவற்றின் மூலம் நிறைய நன்மைகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்பதால் இந்த வழியை தேர்ந்தெடுப்பதே அறிவுடமையாகும்.
‘இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்’ என்பதை ஒரு முஸ்லிம் ஒப்புக் கொண்டால் அவனின் அமல்களை விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டான் என்பதில் இரண்டாவது கருத்து வர வாய்ப்பே இருக்காது.

நபிவழியில் நம் ஹஜ்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
“ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இன்று பல ஹாஜிகள், ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபியவர்கள் செய்த ஹஜ்ஜை சுருக்கமாகச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே இதைப்படித்து நபியவர்களின் ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று “அன்று பிறந்த பாலகனை” போன்றும், ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக.
உம்ராச் செய்யும் முறை
உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம்இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வது. பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும். உடையை அணிந்த பின் “லப்பைக்க உம்ரத்தன்” என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை, இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்)

لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.

லைப்பைக், அல்லாஹும்ம லைப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்.
ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.

பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.
ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாபுக்கு ஒளு அவசியமாகும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புஜத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற எண்ணத்தோடு “ஹஜருல் அஸ்வத்” கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.
1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.
2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.
3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை, தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.
4- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி “அல்லாஹுஅக்பர்” என்று சொல்வது. (இப்போது கையை முத்தமிடக்கூடாது).

இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராத்தைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது, அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை, (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ள வேண்டும். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹுஅக்பர் என்று கூறுவதோ கூடாது. முந்திய மூன்று சுற்றுக்களிலும் “ரம்ல்” செய்வது சுன்னத்தாகும். “ரம்ல்” என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. “ரம்ல்” செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.
ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை, செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ

“ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்”
என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்ராஹிமுக்குப் பின் சென்று தவாபுடைய சுன்னத் இரு ரக்அத்துகளை தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல்யாஅய்யுஹல் காஃபிரூன்) இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹுஅஹது) ஓதுவது சுன்னத்தாகும். முகாமுல் இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் கிடைக்கும் இடத்தில் தொழுதுகொள்ளலாம்.
ஸஃயி
ஸஃயி என்பது ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலையடிவாரத்தை அடைந்ததும்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ

என்னும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவுக்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி பெருமைப்படுத்தி அவனைப்புகழ்ந்து

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُ

லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹுவஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.
என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)
இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். இன்று சிலர் தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவுக்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை.
விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாப் மற்றும் ஸஃயியை கீழ் தளத்தில் செய்ய முடியாவிட்டால் (கூட்டமாக இருந்தால்) மேல்மாடியில் செய்து கொள்ளலாம்.
ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.
குறிப்பு:- தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை.
ஹஜ் செய்யும் முறைகள்
ஹஜ்ஜின் வகைகள் மூன்று
1. ஹஜ்ஜுத்தமத்துஃ
2. ஹஜ்ஜுல் கிரான்
3. ஹஜ்ஜுல் இஃப்ராத்

ஹஜ்ஜுத் தமத்துஃ :-
ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துலஹஜ்) ஹஜ்ஜுக்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை, தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜுத்தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8-ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.
ஹஜ்ஜுல் கிரான் :-
ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை, கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுசெய்தார்கள்.
ஹஜ்ஜுல் இஃப்ராத் :-
இம்முறையில் குர்பானி கடமையில்லை. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத்து வைப்பதாகும்.
கிரான் மற்றும் இஃப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்பவர்கள் 10-ஆம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.
துல்ஹஜ் பிறை 8-ஆம் நாள்
மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.
துல்ஹஜ் பிறை 9-ஆம் நாள்
துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்அத்தாக சுருக்கி லுஹருடன் முற்படுத்தித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரஃபாவுடைய தினம் மிக, சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும்.
நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு,) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்)
அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .

லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “நான் இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)
நபி (ஸல்) அவர்களே அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று சொல்லியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.
குறிப்பு : யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது, இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது.
முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது

ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம்.
நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.
சுபஹுடைய நேரம் வந்ததும் சுபஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும்; கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.
நபி (ஸல்) அவர்கள் மஸ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்)
இன்னும் ஓர் அறிவிப்பில்:-

அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.
துல் ஹஜ் பிறை 10-ஆம் நாள்
சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10-ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள்.
1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது.
2- குர்பானி கொடுப்பது.
3- முடி எடுப்பது.
4- தவாபுல் இஃபாலா செய்வது.

சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
கல் எறிவது
பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.
பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) எறியும் கல்லின் அளவு சுண்டுவிரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக “அல்லாஹுஅக்பர்” என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.
“சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)
கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை இன்னும் ஒருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். ஏறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.
குர்பானி கொடுப்பது
தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் எங்கும் அறுக்கலாம், ஆனால் ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது. “நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்
குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர்; திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.

தலை முடி எடுப்பது
குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.
தவாஃபுல் இஃபாலா
தலை முடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜுக்கான சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) சஃயி செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11-ஆம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.
துல் ஹஜ் பிறை 11-ஆம் நாள்
11-ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் வலது பக்கம் சற்று முன்னால்; சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் இடது பக்கம் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வது சுன்னத்தல்ல.
துல் ஹஜ் பிறை 12-ஆம் நாள்
12-ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12-ஆம் நாளும் 11-ஆம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12-ஆம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13-ஆம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13-ஆம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13-ஆம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 10,11,12,13-ஆம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாப் மற்றும் தொழுகையைத்தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாபை நிறைவேற்ற வேண்டும்.
தவாஃபுல் விதா
ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் விதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாவைச் செய்ய வேண்டும். தவாபுல் விதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் விதாவை செய்து விட்டு கல் எறிகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் விதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் விதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி வருகின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!
இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்
1-உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது.
2-உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது.
3-பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, விரட்டுவது.
4-இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது.
5-தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம்.
6-இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்வது, காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.

ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு பரிகாரமாக ஓர் குர்பானி கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.
ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
தலையை, துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தையல் போடப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது.
பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது, முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

அர்கானுல் ஹஜ் (ஹஜ்ஜின் கடமைகள்)
இவைகளைச் செய்யாமல் ஹஜ்ஜுநிறைவேறாது.
1-நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல்.
2-அரஃபாவில் தங்குதல்.
3-தவாபுல் இஃபாலா செய்தல்.
4-ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.

ஹஜ்ஜுடைய வாஜிபுகள் (அவசியமானவைகள்)
(1) நபி (ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல்.
(2) சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல்.
(3) 10-ஆம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்.
(4) 10-ஆம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12-ஆம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல், 13-ஆம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13-ஆம் நாளும் கல்லெறிய வேண்டும்.
(5) ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது.
(6) 11, 12-ஆம் இரவில் மினாவில் தங்குவது. (13-ஆம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். இந்த இரவு தங்குவது அவசியமில்லை, ஆனால் சிறந்தது.)

(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான்.
இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.
ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! பெண்களுக்கும் ஜிஹாத் உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘ஆம்! போராட்டமற்ற ஜிஹாத் அவர்களுக்குண்டு. அதுதான் ஹஜ்ஜும், உம்ராவும்’ என்றார்கள். (அஹ்மத் இப்னுமாஜா)
புகாரி கிரந்தத்தில் பின்வரும் அறிவிப்பொன்றுள்ளது.
ஆயிஷா(ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்ததாக நாம் ஜிஹாதைக் காண்கிறோம். நாமும் ஜிஹாத் செய்ய வேண்டாமா?’ எனக் கேட்ட போது, நபியவர்கள் ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜே சிறந்தது’ என விடையளித்தார்கள். (புகாரி)
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக இருப்பினும், பெண்களுக்கான ஜிஹாதுக்கான பிரதியீடாக நபியவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது பெண்களுக்கு ஹஜ் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
ஆண்கள் ஹஜ் செய்வது கடமை. அதனை நிறைவேற்றினால் அவர்களுக்கு அக்கடமை நீங்குவதோடு, அதற்கான கூலியும் கிடைக்கும். ஆனால், பெண்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினால் இரண்டு கடமைகள் நீங்குவதோடு, இரண்டு கடமைகளின் கூலிகளும் கிடைக்கும் என நபியவர்கள் கூறியிருப்பதால் பெண்கள் ஹஜ் செய்வதில் அதிக நாட்டம் கொள்வது சாலச் சிறந்தது.
இந்த வகையில், பெண்களோடு மட்டும் தொடர்புபட்ட சில சட்டதிட்டங்களை விளக்கலாம் என நினைக்கிறோம்.
(1) மஹ்ரம்:
ஹஜ் கடமை நிறைவேறுவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொதுவான சில ஷர்த்துக்கள்-நிபந்தனைகள் காணப்படுகின்றன. முஸ்லிமாயிருத்தல், புத்தி சுவாதீனம், அடிமையற்ற நிலை, பருவ வயது, பொருளாதார சக்தி என்பனவே அவை.

இவற்றோடு பெண்களுக்குப் பிரத்தியேகமாக, மஹ்ரமான-திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்ட ஆண்களின் பிரயாணத் துணை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
(கணவன், தந்தை, மகன், சகோதரன், பால் குடிச் சகோதரன், தாயின் கணவன், கணவனின் மகன் என்பவரே பயணத்தில் கூட்டிச் செல்ல அனுமதிக்கப்பட்ட துணைகளாவர்.)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பைப் பாருங்கள்!
‘எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!’ என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் ‘நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!
‘எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.
ஒரு பெண்ணின் ஹஜ் பிரயாணத்திற்குத் துணையாகச் செல்பவர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். புத்தி சுவாதீனம்-சீரிய சிந்தனை, பருவ வயது, இஸ்லாம்.
பொருளாதார ரீதியான வசதிகள் கிடைக்கப் பெற்ற ஒரு பெண் மஹ்ரமில்லாவிட்டால் எவ்வாறு ஹஜ் செய்வது? என்ற கேள்வி எழலாம்.
இந்தக் கேள்விக்கு இன்றைய ஹஜ் முகவர்கள் வித்தியாசமான விளக்கங்கள் கொடுத்து, பெண்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். ஒரு இபாதத் நிறைவேறுவதற்கு அதன் ஒழுங்கு விதிகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும். நிபந்தனைகள்-ஷர்த்துக்கள் முழுமையடைய வேண்டும். இல்லாவிடில் அந்த இபாதத் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அது ஒரு புறமிருக்க, நபியவர்களின் தடையை மீறிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்ட கதையாய் எமது இபாதத் அமைந்து விடக் கூடாது.
அப்படியாயின், மஹ்ரம் துணையற்ற பெண்களது ஹஜ்ஜின் நிலைப்பாடு என்ன? இஸ்லாம் அதற்கும் வழிகாட்டியே உள்ளது. குறிப்பிட்ட அந்தப் பெண்கள் தமக்காகப் பிரதிநிதிகளை நியமித்து அவர்களினூடாக ஹஜ் செய்துகொள்ளலாம்.
பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
(2) கணவனின் அனுமதி:
ஆயுளில் ஒரு ஹஜ்ஜே கடமையானது. அதற்கு மேலதிகமாகச் செய்வது நஃபிலானது-விரும்பத்தக்கது. இவ்வாறு நஃபிலான ஹஜ் செய்ய விரும்புகின்ற ஒரு பெண் தனது கணவனின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஹக்குஸ் ஸவ்ஜ்-கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு மனைவிக்கு வாஜிபாகும். எனவே, நஃபிலானதை விட வாஜிபான செயலே முற்படுத்தப்படல் வேண்டும் என இப்னுல் முன்திர் போன்ற இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

(3) ஆண்களுக்குப் பிரதிநிதியாகச் சென்று பெண்கள் ஹஜ் நிறைவேற்றல்:
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள், மஜ்மூஉ பதாவா என்ற தனது நூலில், ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காகப் பிரதிநிதி என்ற வகையில் ஹஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர் மகளாகவோ, ஏனைய பெண்களாகவோ இருக்க முடியும் என்கிறார். அத்தோடு ஒரு ஆணுக்காகவும் பெண் ஹஜ் செய்ய முடியும் என நான்கு இமாம்கள், மற்றும் பெரும்பாலான அறிஞர்களும் கருதுகின்றனர்.

இமாம்களின் இக்கருத்துக்கு வலுவூட்டும் ஹதீஸும் ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.
‘ஹத்அமிய்யா என்ற பெண்ணின் கேள்விக்கு விடையளிக்கும் போது அவளது தந்தைக்காக ஹஜ் செய்ய நபியவர்கள் அனுமதியளித்தார்கள்.’
(புகாரி, நஸஈ)

(4) இஹ்ராம் கட்டத் தயாராகும் போது பெருந்தொடக்கு ஏற்படல்:
ஹஜ்ஜுக்காகப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண், வழியில் ஹைழ்-மாதவிடாய், நிபாஸ்-பேறு காலத் தீட்டு போன்ற உபாதைக்குள்ளானால் ஏனைய சுத்தமான பெண்களைப் போன்று இவள் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். இஹ்ராம் ஆடை உடுத்துவதற்குச் ‘சுத்தம்’ ஒரு நிபந்தனையாகக்கொள்ளப்படவில்லை.

இமாம் இப்னு குதாமா அவர்கள்: ‘இஹ்ராம் அணியும் போது ஆண்களைப் போலவே பெண்களும் குளித்துக்கொள்ள வேண்டும். ஹைழ், நிபாஸ் போன்ற உபாதைக்குள்ளான பெண்களுக்கும் விதிக்கப்பட்ட கடமையே ஹஜ்ஜாகும்.’
இது பற்றி ஜாபிர்(ரலி) அவர்களது பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது.
‘…நாங்கள் துல்ஹுலையாவை அடைந்த போது அஸ்மா பின்த் அமீஸ், முஹம்மத் இப்னு அபீபக்ர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். உடனே, தான் என்ன செய்வது எனக் கேட்டு நபியவர்களிடம் தூதனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள், ‘குளித்துக் கொள்வீராக! ஆடையை மாற்றிக் கொண்டு, இஹ்ராம் அணிந்துகொள்வீராக!’ எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் 2334)

இது சம்பந்தமாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இவ்வாறு கூறுகிறது:
‘பிரசவத் தீட்டு மற்றும் மாதவிடாய் உபாதைக்குள்ளான பெண்கள் கஃபாவைத் தவாப் செய்வதை மட்டும் விடுத்து ஏனைய அனைத்து கிரியைகளையும் இஹ்ராம் கட்டிக் கொண்டு நிறைவேற்றுவார்கள்.’
(அபூதாவூத், முஃனி 3/293-294, முஸ்லிம் 2307)

இங்கு ஹைழ்-நிபாஸ் உபாதைக்கு உள்ளானோரைக் குளிக்கச் சொல்லியிருப்பது சாதாரண சுத்தத்தையும், கெட்ட வாடைகளற்ற நிலையையும், நஜீஸின் தன்மையைக் குறைத்துக் கொள்ளவும்தான் என விளங்கிக்கொள்ளலாம்.
எனவே, இவ்விரு உபாதைக்குள்ளான பெண்களின் இஹ்ராமுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. இஹ்ராம் நிலையிலேயே அவர்கள் தொடர்ந்திருப்பார்கள். இஹ்ராம் கட்டியவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட எச்செயலிலும் ஈடுபடக் கூடாது. தொடக்கிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் வரை அவர்கள் கஃபாவைத் தவாப் செய்யக் கூடாது.
ஒரு வேளை அரஃபா தினம் வரை அவர்களால் சுத்தமாக முடியவில்லை என்றிருக்குமானால், உம்ராவுக்காக அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தால், அதிலிருந்து விடுபட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்வார்கள். பின்னர் உம்ராவைச் செய்துகொள்ளல் வேண்டும். இதனால் இவர்கள் ‘காரின்’ என்ற நிலையை அடைவார்கள்.
இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இக்கருத்தை ஆதரித்துள்ளார்கள்:
இது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
‘நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் ‘சரிஃப்’ எனுமிடத்தில் அல்லது அதற்கு அருகில் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி(ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம், ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இந்த மாதவிடாய்ப் பெண்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும் வரை இறையில்லத்தைச் சுற்றித் (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்!’ என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.’

(5) இஹ்ராம் அணியும் போது செய்ய முடியுமானவை:
ஆண்கள் போன்றே பெண்களும் குளித்துச் சுத்தமாக இருந்துகொள்ள வேண்டும். களைய வேண்டிய முடிகளைக் களைந்துக் கொள்ளல், நகம் வெட்டுதல், கெட்ட வாடைகளை நீக்குதல் போன்ற விடயங்களைச் செய்துகொள்ளலாம். இஹ்ராம் கட்டிய நிலையில் செய்யக் கூடாதவைகளைச் செய்யாதிருக்க முற்கூட்டியே அவற்றைச் செய்துகொள்ளல் வேண்டும். இத்தேவைகள் இல்லாவிட்டால் அதனை இஹ்ராமுக்கான ஏற்பாட்டுக் காரியமாக நிறைவேற்றத் தேவையில்லை. இஹ்ராமுக்கான செயற்பாடுகளில் அவை உள்ளடங்க மாட்டாது. வாசம் வெளிப்படாத வகையில் மணம் பூசிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘நாம் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்ற போது எமது நெற்றியில் கஸ்தூரியைப் பூசியிருந்தோம். எமக்கு முகம், வியர்த்து வடிந்த போது அதனை நபியவர்கள் கண்டார்கள். எனினும் அதனைத் தடுக்கவில்லை’. (ஆயிஷா(ரலி), அபூதாவூத்)
(6) முகம் மறைக்கக் கூடாது:
இஹ்ராம் கட்டியதும் பெண்கள் முகம் மறைக்கக் கூடாது. வழமையாக முகத்தை மறைத்து ஆடை அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தாலும் முகத்தைத் திறக்க வேண்டும்.

பெண்கள் (ஹஜ்ஜின் போது) முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டாம்!’ (புகாரி)
கைகள், கால்கள், முகம் ஆகிய உறுப்புக்களோடு ஒட்டிய நிலையில் Gloves, Socks, Burka (Face Cover) என்பன அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சாதாரண ஆடைகள் மூலம் அவை அன்னிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு ஆடை அணிவதில் குற்றமில்லை என்பது இமாம்களின் கருத்தாகும்.
(7) விரும்பிய ஆடையை அணிந்துகொள்ளல்:
இஹ்ராமின் போது கவர்ச்சியற்ற தாம் விரும்பிய ஆடைகளை அணிந்துகொள்ளப் பெண்களுக்கு அனுமதியுண்டு. குறிப்பாகப் பெண்களுக்குரிய ஆடைகளாக அவை இருக்க வேண்டும். ஆண்களின் ஆடைகளுக்கு ஒப்பானவையாக இருக்கக் கூடாது. உடல் உறுப்புக்களின் அமைப்புக்கள் விளங்குமாறு இறுக்கமானதாய் அமையக் கூடாது. உடலுறுப்புக்களை மறைக்காத மெல்லியதாய் இருக்கக் கூடாது. கைகள், கால்கள் தெளிவாக வெளிப்படும் தன்மை கொண்ட கட்டை ஆடைகளாக இருக்கக் கூடாது. பொதுவாகப் பெண்களின் ஆடைகள் விசாலமானதாகவும், தடித்ததாகவும், தாராளமானதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

பெண்களுக்கென்று தனியானதொரு நிற ஆடை அணிய வேண்டும் என்று எந்த விதியும் இஸ்லாத்தில் கூறப்படவில்லை. ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான நிற ஆடைகளை அணிந்துகொள்ளலாம்.
(8) தனக்குள் மட்டும் தல்பியா சொல்தல்:
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டவர்கள் ‘தல்பியா’ சொல்வது கடமையாக்கப்பட்டுள்ளது. எனினும், தனது சத்தம் தனக்கு மட்டும் கேட்குமாறு தல்பியாவை மொழிவது சுன்னத்தாகும். எனவே, பெண்கள்
தமது குரல்கள் வெளிப்படுத்தப்பட்டு அதனால் ஏனைய ஆண்களின் கவனம் ஈர்க்கப்படாதிருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
(9) தவாப் செய்யும் போது:
தவாப் செய்யும் போது பெண்கள் தம்மை முழுமையாக மறைத்துக்கொள்ள வேண்டும்; சத்தத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்; பார்வையைத் தாழ்த்திக்கொள்வதோடு, ஆண்களோடு முட்டி மோதும் நிலையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கஃபாவில் ஆண்கள்-பெண்கள் வேறுபாடின்றிக் கலந்துகொள்ளும் நிலை காணப்படுவதால், இவ்விடயத்தில் பெண்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ போன்ற இடங்களில் ஆண்களோடு முட்டி, மோதி நெருக்கடிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை கிடையாது. தவாபுக்காகவும் நெருக்கடிக்குள் செல்ல வேண்டிய தேவையில்லை. தவாபின் ஓடுபாதையில் ஓரங்களில் ஒடுவது நல்லது. ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லை முத்தமிடுவது ஒரு ஸுன்னா. ஆனால், ஆண்களோடு பெண்கள் நெருக்கடிக்கப்படுவது ஹராம். எனவே, ஸுன்னாவை விட ஹராம் பெரியது என்பதைக் கவனத்திற்கொள்ளல் வேண்டும். இமாம் நவவி(ரஹ்), இப்னு குதாமா போன்ற இமாம்கள் இக்கருத்தையே முன்வைக்கின்றனர்.

(10) தவாப் செய்யும் முறை:
பெண்கள் க’அபாவைத் ‘தவாப்’ செய்யும் போதும், ஸஃபா-மர்வாவுக்கிடையில் ‘ஸஈ’ செய்யும் போதும் நடந்தே செல்ல வேண்டும். ஆண்கள் ஓடும் இடங்களில் இவர்கள் ஓடத் தேவையில்லை.

(11) மாதவிடாய் பெண் செய்யக் கூடியவை:
மாதவிடாய்க்குட்பட்ட இஹ்ராம் அணிந்த பெண்கள் சுத்தமாகும் வரை எவற்றைச் செய்யலாம்? எவற்றைச் செய்யக் கூடாது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அனைத்துக் கிரியைகளையும் செய்யலாம். (இஹ்ராம், அரஃபாவில் தரித்தல், முஸ்தலிஃபாவில் தரித்தல், கல்லெறிதல்)
ஆனால், கஃஅபாவைத் ‘தவாப்’ செய்வது கூடாது.
இங்கு இன்னொரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் செய்த பின் ஸஈயின் போது மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் தொடர்ந்து ஸஈ செய்யலாம். தவாப் முடிவதற்கு முன்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் ஸஈ செய்ய முடியாது. ஏனெனில், தவாபுக்குப் பின்னரே ஸஈ செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
கஃஅபாவைத் தவாப் செய்வதற்குப் போன்று ‘ஸஈ’ செய்வதற்குச் சுத்தம் நிபந்தனையாகக் கொள்ளப்படவில்லை.
(12) தலைமுடி கத்தரித்தல்:
ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்றி விட்ட பெண்கள் ஆண்களைப் போன்று தலைமுடியை மழிக்க வேண்டிய கடமை கிடையாது. ஆண்கள் தமது தலைமுடியை முழுமையாக மழிக்க, பெண்கள் தமது கொண்டையின் கூந்தலில் சிறு பகுதியைக் கத்தரித்தால் போதுமானது.

பெண்கள் தலைமுடியை மழிப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:
‘பெண்களுக்கு முடி மழிப்பது கடமையில்லை. அவர்கள் கத்தரித்தால் மட்டும் போதுமானது’ என நபியவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்)
அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘பெண்கள் தலையை முழுமையாக மழிப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்’. (திர்மிதி)

(13) தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டால்:
‘தவாபுல் இபாழா’ என்பது ஹஜ்ஜுக்காக நிறைவேற்றப்படும் கடமையாகும். இதன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் ‘தவாபுல் வதா’ (பிரியாவிடை தவாப்) நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.

இது பற்றி அயிஷா(ரலி) இனால் அறிவிக்கப்பட்டுள்ள பல செய்தி விளக்குகிறது. (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
(14) மஸ்ஜிதுன் நபவியைத் தரிசித்தல்:
ஹஜ்ஜுக்குச் சென்ற பெண்கள் கடமை முடிந்த பிறகு விரும்பினால் மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழலாம். எனினும், கபுறுகளைத் தரிசிப்பதற்கென்றே பயணிப்பதற்கு அனுமதி கிடையாது. நபியவர்கள் கபுறடிக்குச் சென்று ‘பரகத்’ தேட நினைக்கக் கூடாது. அவ்வாறு எண்ணுவது முழு ஹஜ்ஜையும் பாழாக்கி விடும். மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று அதன்பின் நபியவர்களதோ, ஏனைய நல்லடியார்களினதோ கபுறுகளை ஸியாரத் செய்வதற்கும், அதன் மூலம் மரணத்தை நினைவு கூர்ந்து அவர்களுக்காக துஆச் செய்வதற்கும் அனுமதியுண்டு.

இது வரை விளக்கிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு எமது ஹஜ்ஜை நிறைவேற்றி அன்று பிறந்த பாலகனைப் போன்று வீடு திரும்ப எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
“எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!” என்று கூறினார்.
அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது,
இப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும்.
இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம்.
பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்”. (37:101-108)
குர்பானியின் நோக்கம் இறையச்சம் என்பதைத்தவிர வேறில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள்; தெளிவு படுத்துகின்றன.
குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)
உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதன் அவசியத்தை மற்றுமொரு திருமறை வசனம் எடுத்துக் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்களைக் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது.
“உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக” (108:02)
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றி யுள்ளார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்புக் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளைத் தன் கரத்தால் அறுத்துப் பலியிட்டார்கள்”.
(அனஸ்(ரலி) – புகாரி, முஸ்லிம்)

இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரும் இக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும்வரை நகம், முடி ஆகியவைகளை நீக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்;
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பினால் துல் ஹஜ் மாதம் தலைப்பிறை முதல் அதனை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் என்பவற்றைக் களைவதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்.
(உம்மு ஸல்மா(ரலி), முஸ்லிம்)

குர்பானிப் பிராணிகள்:
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே அறுத்துப் பலியிட வேண்டும். இவை அல்லாத ஏனைய பிராணிகளை அறுத்துப் பலியிட்டால் “உழ்ஹிய்யா” நிறைவேறாது.

“ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம்) நாற்கால் பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்”. (22:34)
பிராணியின் வயதெல்லை :
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )

இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸில் நபித்தோழர் “முஸின்னா”வை விட சிறந்த ஆறுமாதக்குட்டி உள்ளது என்ற கூற்று நபி(ஸல்) அவர்கள் “முஸின்னா”வைத்தான் குர்பானி கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. உமக்குத்தவிர வேறு எவருக்கும் இது அனுமதியில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் முஸின்னாவைத் தான் கொடுக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக விளக்குகின்றது.
அறுத்துப் பலியிடத் தகாதவைகள்:
உழ்ஹிய்யாக் கொடுக்கப்படும் பிராணி குறையற்றுக் காணப்படல் வேண்டும்.

1) வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
2) வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருடு
3) வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
4) மிகவும் மோசமாக மெலிந்திருத்தல் போன்ற குறைகள் இருத்தல் கூடாது. (திர்மிதி)

அறுத்துப் பலியிடும் நேரம்:
ஹஜ்ஜுப் பெருநாள் சூரியன் உதயமாகி, பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடித்தது முதல் அய்யாமுத் தஷ்ரீகின் கடைசி நாள் (துல்ஹஜ் மாதம் பதின்மூன்றாம் நாள்) வரை “உழ்ஹிய்யாவை” நிறைவேற்றலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அறுக்கப்படுவது உழ்ஹிய்யாவாகக் கணிக்கப்பட மாட்டாது.

“நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டுக் குர்பானி கொடுக்கின்றாரோ, அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவராவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ, அவர் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார்” என்று குறிப்பிட்டார்கள். (பரா(ரலி) – புகாரி)
குர்பானிப் பிராணிகளில் ஆணும், பெண்ணும்:
பெட்டை ஆடுகளையும், பசுக்களையும், கிடாய்களையும் முஸ்லிம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சிலபகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போன்று கருதுகின்றனர். சாதாரண நேரத்தில் பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள் குர்பானி கொடுப்பதற்கு பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர்.

இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.
உண்பதற்கு அனுமதிக்கப் பட்டவைகளில் கிடாயும், பெண்ணாடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும். பறவைகளில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர். குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானவை என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை; நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், “ஜத்உ” (கன்று) என்று ஆண் பாலில் கூறப்பட்டுள்ளது போன்றே, “ஜத்அத்” என்று பெண் பாலிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆண் கால்நடைகளைத்தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கூட்டுச் சேர்ந்து கொடுத்தல்:
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.
“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் முறை:
1) ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
2) ஒட்டகங்களை நிற்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
3) அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும். (புகாரி)

தாமே அறுப்பது நபிவழி:
உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும்.

நபியவர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)
உழ்ஹிய்யா மாமிசத்தைப் பங்கிடல்:
“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தனது உழ்ஹிய்யாவிலிருந்து தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.

“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்: வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்”. (22:28)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“மாமிசத்தை நீங்களும் சாப்பிட்டுப் பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், உங்களுக்காகச் சேமித்தும் வையுங்கள்”. (புகாரி, முஸ்லிம், நஸாயி)

குர்பானி மாமிசத்தை காபிர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.
“(குர்பானிக்கான) ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக உங்களுக்கு நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை உண்டு. எனவே, (அது உரிய முறையில்) நிற்கும் போது அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள். அது தனது விலாப் புறங்களின் மீது சாய்ந்து விட்டால் அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவனுக்கும், யாசிப்பவனுக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறே அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தியுள்ளோம்”. (22:36)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும், யாசிப்பவர்கள் என்றும் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனினும், ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்களின் பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றைய நாளில் பசியின்றி இருப்பது அவசியம். இந்த அடிப்படையில் தான் குர்பானி கொடுக்கப்படுகிறது. எனவே, முதலிடம் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது முக்கியமாகும். கூடுதலாக இருக்கும்போது காபிர்களுக்குக் கொடுத்தால் எந்தத் தவறுமில்லை.
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி:
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்குச் சரியான ஹதீஸ் எதுவும் காணக்கிடைக்கவில்லை. இதற்கு சிலரால் எடுத்துக் காட்டப்படும் ஆதாரம் சரியற்றதாகவும், பலவீனமாகவும் உள்ளது.

“ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விடயங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை, நிரந்தர தர்மம், பயன் தரும் கல்வி, தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று” நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூஹுரைரா(ரலி) – முஸ்லிம்)

மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கும் வழி இந்து மூன்றும்தான். இது அல்லாத வேறு வழிகளில் நன்மை சேரும் என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். குர்பானி விடயத்தில் நபி(ஸல்) அவர்கள் இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும் படி கூறவில்லை. ஸஹாபாக்களும் கொடுத்ததில்லை.
இறந்தவர்கள் சார்பாகக் குர்பான் கொடுக்கலாம் என்று கூறக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸும் ஆதாரபூர்வமானது அல்ல.
அலி(ரலி) அவர்கள் இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். ஒன்றைத் தனக்காகவும், இன்னொன்றை நபி(ஸல்) அவர்களுக்காகவும் கொடுத்தார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். எனவே, அதை ஒருபோதும் விடமாட்டேன் என்றார்கள்.
(ஹன்ஷ் – திர்மிதி, அபூதாவூத்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஷரீக் இப்னு அப்துல்லாஹ், அபுல் ஹன்ஸா, ஹன்ஷ் இப்னு முஃதமர் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் இந்தச் செய்தி ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.
குர்பானியின் மூலம் அல்லாஹ் எதிர்பார்ப்பது இறையச்சம் மட்டுமே! இந்த இறையச்சம் அவரவர் கொடுக்கும் போதுதான் வெளிப்படும். இறந்தவருக்காக நாம் கொடுப்பது அவரின் இறையச்சத்தை வெளிப்படுத்தாது.
எனவே, உழ்ஹிய்யா எனும் வழி முறையை நபிவழி பேணி நாமும் கொடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.!